திரை விமர்சனம்

கனெக்ட் திரை விமர்சனம்

மகளைப் பிடித்த ஆவியை விரட்ட போராடும் ஒரு அம்மாவின் கதையை திகில் பின்னணியில் தர முயன்றிருக்கிறார்கள்.

அம்மாவாக நயன்தாரா. மகளாக ஹனியா. தனது டாக்டர் தந்தையின் இறப்பை தாங்க முடியாத மகள் ஓஜா போர்டு மூலம் தந்தையின் ஆவியுடன் பேச முயல… தந்தையின்ஆவிக்குப் பதில் தவறுதலாக இன்னொரு ஆவி வந்து விட… அந்த ஆபத்தான ஆவியை மகளிடம் இருந்து விரட்ட அம்மா எடுக்கும் அடுத்தடுத்த போராட்டங்களே கதைக்களம்.
அம்மாவாக வரும் நயன்தாராவுக்கு நாற்பதுநெருங்கினாலும் நடிப்பில் மட்டும் மற்றவர்கள் நெருங்கமுடியாத தூரத்தில் இருக்கிறார். மகளை ஆவியிடம் இருந்து மீட்க முடியாதோ என்று தவிக்கும் இடத்தில் அந்த அம்மாவின் பரிதவிப்பு நம்மையும் பற்றிக் கொள்கிறது. நடிப்பில் இவருக்கு அடுத்த இடத்தில் பாதிரியார் அனுபம்கெர் இருக்கிறார். பாசமுள்ள அப்பாவாக சத்யராஜ்.
காட்சிக்கு காட்சி பார்வையாளர்களை அச்சுறுத்தும் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற இயக்குநரின் எண்ணத்துக்கு மாறாக மொத்தப் படமுமே வெறும் ‘திகில்’ அனுபவத்துடன் சுருங்கிப்போவது ஏமாற்றம்.
ஒரு வீடு, ஐந்து – ஆறு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து கதையை ஒண்ணரை மணி நேரத்தில் முடித்த இயக்குனர், கதையை விட பின்புலம் இல்லாத ஆவியை அதிகம் நம்பியது ரசிகனுக்கு நேர்ந்த சோகம்.

கிறிஸ்தவ பாதிரியார் அனுபம்கெரால் விரட்ட முடியாத ஆவி அடுத்த காட்சியில் சர்வசாதாரணமாக அடக்கப்படுவது இயக்குனர் அஸ்வின் சரவணன் போட்ட மந்திரமோ என்னவோ…அதேபோல், அந்த ஆவியின் பெயர் தெரிந்து விட்டது என்று கூறும் அனுபம் கெர், அந்த பெயரை வைத்து என்ன செய்தார்? என்று சொல்லாததும் ஆவிக்கதைக்குள் இடை புகுந்த புகை மண்டலம்.

திகிலில் மிரட்டியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *