காதல் சண்டையும் கபடி சண்டையும் தான் ‘அருவா சண்ட’ ஆதிராஜன் இயக்கத்தில் 30-ந்தேதி வெளியாகிறது படம்
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட.’
பல தடைகளைத் தாண்டி இந்த படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி உலகம் எங்கும் வெளியிடப்படுகிறது. சிலந்தி, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், ‘அருவா சண்ட’ படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் ஆதிராஜன் கூறுகையில், ‘‘என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் ஜாதி சண்டைகளும் கௌரவக் கொலைகளும் தினசரி பத்திரிகைகளிலும் சேனல்களிலும் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டு தான் இருக்கிறது. சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைப்போம் என்று வாய் கிழியப் பேசினாலும் சாதிக்கு ஒரு சங்கம் வைத்து வீதிக்கொரு பேனர் வைக்கும் கலாச்சாரத்தில் இருந்து தமிழகம் மீளவில்லை. எனவே சமகால சமுதாயத்தின் பிரதிபலிப்பு தான் இந்த படம்.
படத்தில் புதுமுகம் ராஜா கதையின் நாயகனாகவும், மாளவிகா மேனன் நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். இருவரும் நடிப்பில் போட்டி போட்டு தங்கள் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கின்றனர். நிஜமாகவே கபடி வீரரான ராஜா இ்நத படத்தின் கபடி காட்சிகளில் தன் திறமையை காட்டியிருப்பதுடன், சண்டைக் காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். அவர் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் நிச்சயமாக ரசிகர்கள் கவனத்தை ஈர்ப்பது உறுதி.
தேசிய விருது பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் இதுவரை நடிக்காத மாறுபட்ட கதாபாத்திரத்தில் வள்ளியம்மாவாக வாழ்ந்திருக்கிறார். இந்த படத்திற்காக தினமும் ஒன்றரை மணி நேரம் டல் மேக்கப் போட்டு தன்னை ஒரு செங்கல் சூளை தொழிலாளியாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். இந்த கேரக்டரை வேறு யாராலும் இத்தனை சிறப்பாக கையாண்டிருக்க முடியாது. அதேபோல ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா இருவரும் வில்லன்களாக வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். இருவருக்குமே இந்த படம் இன்னொரு ‘சுந்தரபாண்டியனாக’ இருக்கும்.
கஞ்சா கருப்பு, காதல் சுகுமார், விஜய் டிவி சரத், டைரக்டர் மாரிமுத்து, மதுரை சுஜாதா, வெங்கடேஷ், ரஞ்சன், யாசர், ரமேஷ், மூர்த்தி, வீரா, நிஷா ஆகியோரும் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். இந்த படத்தில் பல கபடி போட்டிகள் இடம் பெறுகின்றன. நிஜமான கபடி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி இருக்கின்றார்கள். பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு கபடி போட்டிகளை விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பாண்டி. தரண்குமார் இசையமைத்திருக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதி இருக்கிறார். படத்தில் வீரத்தமிழன் விளையாட்டுடா…” என்ற கபடிக்கான சிறப்பு பாடலையும், அம்மா பாடலையும் நான் எழுதி இருக்கிறேன். மற்ற பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். அவர் எழுதிய ‘சிட்டு சிட்டு குருவி’ பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியிருக்கிறார்.
வி ஜே சாபுஜோசப் எடிட்டிங் செய்திருக்கிறார். தீனா, ராதிகா மாஸ்டர்கள் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர். தளபதி தினேஷ் சண்டைக்காட்சி அமைக்க சுரேஷ் கல்லேரி கலை ஆக்கத்தை கவனித்திருக்கிறார்.
படம் முழுவதும் வசனங்கள் வாள் சண்டை நடத்தும். கிளைமாக்ஸ் காட்சி உயிரை உலுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய சினிமாவில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் வந்ததே இல்லை.படம் முடிந்து போகும் போது கலங்காத நெஞ்சமும் கலங்கி விடும். கசியாத விழிகளும் கசிந்து விடும். சரண்யா மேடத்திற்கு இந்த படம் பல விருதுகளை அள்ளித் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
இயக்குநர் பா.ரஞ்சித் ஒரு சமூகத்திற்காக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இயக்குநர்கள் முத்தையா, மோகன்.ஜி. ஆகியோர் வெவ்வேறு சமுதாயத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். ஆனால் ‘அருவா சண்ட’ இரண்டு தரப்பு நியாயங்களையும் அநியாயங்களையும் உரக்கப் பேசும்…. அதுவும் அனல் பறக்கப் பேசும் என்பது உறுதி’’ என்கிறார்.