சினிமா செய்திகள்

அப்பா ஆகிறார், அட்லி

இயக்குனர் அட்லி, அடுத்தடுத்த தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர். ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அட்லி, தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து நான்கு பிளாக் பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கு பிடித்த இயக்குனர் வரிசையில் இணைந்தார். இப்பொழுது பிரபல இந்தி நட்சத்திரம் ஷாருக்கான் நடிப்பில் இந்தியாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.
இயக்கம் மட்டுமல்லாமல், தனது மனைவி பிரியாவுடன் இணைந்து ‘A for Apple Productions’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம்’ திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன. அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.
இயக்குனர் அட்லி, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம் பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்க்கையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவர்கள் அப்பா-அம்மா ஆகப்போகிறார்கள். இந்த மகிழ்ச்சித் தருணம் முக்கியமானது. காத்திருந்த நாட்களின் எதிர்பார்ப்பு மழலையாக கருக்கொண்டதில் இவர்கள் குடும்பங்களிலும் இ்பபோது மகிழ்ச்சித் தாண்டவம். எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
‘சந்தோஷத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரப்போவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்திருக்கிறோம்’ என்கிறார்கள், அட்லி-பிரியா தம்பதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *