சினிமா செய்திகள்திரை விமர்சனம்

குருதி ஆட்டம் பட விமர்சனம்

`8 தோட்டாக்கள்’ வெற்றிப் படைப்பு மூலம் திரையுலகை உற்று நோக்க வைத்த ஸ்ரீ கணேஷ், மதுரையை மையமாக வைத்து குருதி கொப்பளிக்க உருவாக்கிருப்பதே இந்த குருதி ஆட்டம்.
நட்பு – துரோகம் பின்னணியில் வடிவமைக்கபட்ட எதை என்பதால், தொடக்கம் முதலே ஒருவித பரபரப்பு படத்துடன் இணைந்து கொள்கிறது.
கபடி விளையாட்டில் தோற்கவே தோற்காத அதர்வா அணிக்கும், வழக்கம்போல தோற்றுப் போகும் மதுரை தாதா ராதிகாவின் மகன் அணிக்கும் உள்ளூர முட்டல் மோதல். ஒருகட்டத்தில் தொடர்தோல்வியால் ஆவேசம் கொள்ளும் தாதாவின் உறவுக்கார இளைஞன் அதர்வா அணியில் இருந்த ஒரு வீரனை அடித்து விட, பதிலுக்கு அதர்வா அடித்தவனை தியேட்டரில் தனியாக சிக்கும்போது சுளுக்கெடுக்கிறார். இதனால் தாதா குடும்பம் அதர்வாவுக்கு ஸ்கெட்ச் போட… அதில் சில பல ட்விஸ்ட்டுகள் உட்புகுந்து தாதாவின் மகனையும் அதர்வாவையும் நண்பனாக்கி விடுகிறது.
இந்த நட்பு தாதாவின் உறவுக்கார இளைஞனுக்கு தெரிய வர, அவனோ சைலண்டாக இந்த இருவரையும் போட்டுத் தள்ள முடிவு செய்கிறான். முடிவு என்னாகிறது என்பது ரத்தம் தெறிக்கும் கிளைமாக்ஸ்.

இந்த அடிதடிக்கதைக்கிடையே அதர்வா-பள்ளி டீச்சர் பிரியா பவானி சங்கரின் காதல், ஆஸ்பத்திரியில் உடல் நலமற்ற சிறுமி மீதான அதர்வாவின் அக்கறை என பாசப்போராட்டத்தையும் இணைத்த விதத்தில் சென்டிமென்ட் பக்கத்திலும் நிரம்பி வழிகிறது, கதைக்களம்.

துடிப்பான இளைஞனாக வரும் அதர்வா, காதல், நட்பு, அதிரடி என நடிப்பில் பல முகம் காட்டுகிறார். பிரியா பவானி சங்கருடனான காதலில் நடிப்பில் எடை கூடித்தெரிகிறார். சிறுமி மீதான பாசத்தில் நெகிழ வைக்கிறார்.. தாதா மகன் கண்ணா ரவியுடனான நட்பிலும் சிறப்பு. அக்காவின் பாசப்பிணைப்பிலும் கூட நடிப்பில் வேறு பரிமாணம் தெரிகிறது.

அதர்வாவின் காதலை முதலில் நிராகரிப்பதிலும் பின்னர் அவரது இயல்பு தெரிந்து காதலாகும் இடத்திலும் பிரியா பவானி, நம் மனதில் பிரிய பவானியாகி விடுகிறார். தன் தந்தை மாதிரியே காதலனுக்கும் ரவுடி முத்திரை விழுந்து விடுமோ என்று பயப்படுகிற இடத்தில் பிரியா, நடிப்பில் பல படி தாண்டுகிறார்.

ராதிகாவுக்குப் பெரிய தாதா கதாபாத்திரம். மதுரைத் தமிழில் கோபம் கொப்பளிக்கக் கட்டளையிடுவது, ஈவு இரக்கமில்லாமல் சுடுவது என நிஜ தாதாவை கண்முன் நிறுத்துகிறார்.

வரும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார், ராதாரவி. ‘துப்பாக்கின்னா என்னடா?’ என்று மகனை கேட்டு மகன் பதில் சொன்ன மாத்திரத்தில் காரில் இருந்து இறக்கி விடும் இடத்தில் ராதாரவியின் நடிப்பும் அந்த நக்கலும் வேறு லெவல்.

தாதாவின்மகனாக வரும் கண்ணா ரவியிடம் அந்த கேரக்டருக்கென்றே வார்த்த மாதிரி அப்படியொரு நடிப்பு. அதர்வா அவரின் நட்பு வட்டத்துக்குள் வந்த பிறகு அந்த நட்பு ராஜ்யம் தனி மரியாதை பெறுகிறது. சரியான வாய்ப்புக்கள் அமையுமானால் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடம் இவருக்கு நிச்சயம்.

வாயில் கத்தியும் கண்களில் ஆவேசமுமாய் வரும் அந்த வில்லன் வத்சன் சக்ரவர்த்தி நிஜமாகவே பயமுறுத்துகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் அந்தோணி தாசன் பாடிய ‘ரங்க ராட்டினம்’ பாடல் படம் முடிந்த பிறகும் மனதில் ரீங்காரமிடுகிறது.

பழி வாங்கும் கதைக்குள் சிறுமி பாசம், அழகான காதல், உன்னத நட்பு என இழையோடும் காட்சிகள் என வார்த்தெடுத்த விதத்தில் ‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீணேஷின் தோட்டா இம்முறையும் குறி தவறாமல் பாய்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *