வெங்கடேஷ் பிரபு @ தனுஷ் நடிச்ச துள்ளுவதோ இளமை ரிலீஸான டே-வாம்
அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சிறப்புக் கட்டுரை இதோ
பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி அதாவது 2002ல் கோலிவுட் வழக்கம் போல் ரொம்ப பிசியா இருந்துச்சு… வெட்டியான புரொடியூசர்கள் தலையீடு அப்போதெல்லாம் சுத்தமாக இல்லாததால் கோடம்பாக்கமே பிசியா பிழைப்பை ஓட்டி ஹேப்பியா இருந்தாங்க.. அந்த வகையில் டாப் ஸ்டார்கள் ஏகப்பட்ட பேர்களில் படங்கள் ரீலீஸான ஹேப்பியான வருசமது.
கொஞ்சம் டீடெய்லா சொல்லணுமுன்னா ரஜினியின் பாபா, கமலின் ‘பஞ்சதந்திரம்’, விஜயகாந்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான ‘ரமணா’, மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, விஜயின் ‘பகவதி’, அஜித்தின் ‘வில்லன்’, விக்ரமின் ‘ஜெமினி’, லிங்குசாமி இயக்கிய ‘ரன்’ அப்படீன்னு ரிலீஸான பெரும்பாலான படங்கள் ஹிட் அடிச்சிது
அதே 2002 இதே மே மாதம் 10ம் தேதிதான் ‘துள்ளுவதோ இளமை’ அப்படீங்கற படமும் வெளியாச்சு.
அந்தப் படத்தைப் பற்றி மக்களுக்கு தெரிந்திருந்த இரண்டே விஷயம் கஸ்தூரி ராஜா இயக்கியிருந்த படம், அவருடைய மூத்த மகனும் இன்று புகழ்பெற்ற இயக்குநர்களில் முக்கியமானவருமான செல்வராகவன் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி தமிழ் சினிமாவில் அதிகாரபூர்வமாக காலடி எடுத்து வைத்தார். இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைச்சிருந்தார். ஆங்.. ஒரு விசயம் நெனவுக்கு வருது..கஸ்தூரி ராஜா இயக்கத்தில் என்று இப்படத்தின் போஸ்டர்கள் வெளிவந்த பொழுது, பலரும் குழப்பத்தில் அப்படியே ஷாக் ஆகி புட்டாய்ங்க. ‘என் ராசாவின் மனசிலே’, ‘எட்டுப்பட்டி ராசா’ என்று படமெடுத்த கஸ்தூரி ராஜாவா இது என்ற கேள்வி பலருக்கும் இருந்துச்சு. அந்த அளவு அதிர்ச்சி ஏற்படுத்திய போஸ்டர்கள் அவை
படத்தில் தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, விஜயகுமார் தவிர பலரும் படத்தில் புதுமுகங்கள். அதில் ஒருவர் தனுஷ். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் வழக்கம் போல் தரமாக இருந்து ஹிட் அடிச்சதாலோ என்னவோ படமே வேறு விதமாக டாக் ஆஃப் த யூ மூவி ஆகி போச்சு. இத்தனைக்கும் பள்ளி மாணவர்கள், மாணவிகளின் நட்பு, நட்பை மீறிய உறவு, உடல் மாற்றம், கிளர்ச்சி, என அத்தனையும் பேசிய இந்தப் படத்தில் மாணவர்களுக்குள் நடக்கக் கூடியது, நடக்கக் கூடாதது என அத்தனையும் காட்டியிருந்தாய்ங்க. அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது தன்னை பார்த்தவர்கள் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவாக நடிக்க வந்துவிட்டது என்று கிண்டல் செய்ததாக தனுஷ் பேட்டி ஒன்றில் தெரிவிச்சிருந்தார்.
ஆனா அந்தப் படம் வெளிவந்த பின்னர்தான் தெரிந்தது, இது கஸ்தூரி ராஜா படமல்ல, செல்வராகவன் படமென்று. வெங்கடேஷ் பிரபு என்னும் இயற்பெயர் கொண்ட தனுஷ் என்ற சுள்ளான் அறிமுகமான இந்தப் படத்தில் அவரது எதிர்காலம் இப்படியிருக்கும் என யாரும் நினைக்கவில்லை. அந்த து இ’ படத்தின் ஓப்பனிங் சீன் மிலிட்டரிக்கு பணியாற்றச் சென்று பத்தாண்டுகளுக்குப் பிறகு, தான் படித்த பள்ளிக்கூடத்தைக் காணவரும் அதிகாரியின் அறிமுகத்தோடு தொடங்கும். ஆனால், ராணுவ அதிகாரிக்கான எந்தத் ஸ்டஃப்-பும் இல்லாமல், ஒல்லிப்பிச்சாண் தேகத்தோடு, தொள தொளவெனத் தைக்கப்பட்ட மிலிட்டரி யூனிஃபார்மோடு, ஒட்டவைத்த மீசையோடு வந்து நிற்பார், தனுஷ்.. சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் வளர்க்கப்படும் டீன்ஏஜ் குழந்தைகளின் கதைதான் ‘ஆனால்; அந்த ராணுவ அதிகாரி, தனுஷ். இன்றும் பொருத்தமில்லாமல் இருக்கும் அந்த முதல் காட்சி பலரையும் அன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல இப்போதும் சிரிக்க வைத்திருக்கும்.
அதே சமயம் ‘தீண்ட தீண்ட’ பாடலுக்காகவே டீன் ஏஜ்காரர்கள் குவிய, பெற்றோர்களோ கொதித்தனர். இறுதியில் மெசேஜ் எல்லாம் சொல்லியிருந்தாலும் படம் முழுவதும் வேறு லெவல்தான். பள்ளி மாணவர்களை மிக மோசமாக சித்தரித்திருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இதன் வெற்றி, இதே போன்று பத்து படங்கள் வர வழிவகுத்தது. இது ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆனது.
மொத்தத்தில் அன்று அந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு, ‘நல்லா நடிச்சிருக்காப்ளயே’, ‘இவனெல்லாம் எதுக்கு நடிக்க வந்தான்’ என மன ஓட்டம் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், மிரட்டலான நடிப்பால் அசத்தப் போகும், கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எல்லைகள் தாண்டி ஆடப்போகும் ஒருவனின் அறிமுகத்துக்கு நாம்தான் ஐ-விட்னஸ் என அவர்கள் இப்போது பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அன்று தனுஷே போய் ஆடியன்ஸ் கையில் டிக்கெட்டைக் கொடுத்து “நான் பின்னால பெரிய நடிகனா வரப் போறேன் என்னோட முதல் படத்தை வந்து பாருங்க” என சத்தியம் செய்து அழைத்திருந்தாலும் யாரும் நம்பியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதைச் சொல்லாமலே செய்துகாட்டி இன்னும் இன்னும் ஆச்சர்யங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
இந்த அடலன்ஸ் மூவியான ‘துள்ளுவதோ இளமை’ ரிலீஸான சமயத்திலே, பி-கிரேடு படம் அப்ப்டீங்கற கேட்டகிரியில்தான் அது அடக்கப்பட்டுச்சு. அதனாலேயே நியூ பேஸாக இந்த படத்தில் நடிச்ச தனுஷின் நடிப்பு எப்படி? அப்ப்டீன்னும், இந்த பையன் தேறுவான் என்று கணிச்சவங்களும் இருந்திருப்பாங்களா? – என்பதே டவுட்தான். ஆனா கோலிவுட்டில் எண்ட்ரி ஆன நாளிலிருந்து மீடியா ஆட்களை கருவேப்பிலையாக எண்ணி தூக்கி எறிந்து ரியாக்ட் செய்யும் தனுஷ் தன்னை பக்காநடிகராக மாற்றிக் கொண்டார்? -ன்னு சக சினிமா ரிப்போர்ட்டர்-கிட்டே கேட்டேன் (கட்டிங் கண்ணையா)
“அது ஒரு படத்தில் நடக்கவில்லை. ‘காதல் கொண்டேன்’- படத்தில் சோனியா அகர்வாலிடம் ‘நா இதோ இந்த மூலைல ஒரு நாய் மாதிரி இருந்துக்குறேன்’ என சொல்லும் போது கொஞ்சம், ‘அது ஒரு கனா காலம்’ படத்தில் ப்ரியாமணி தனுஷைப் பார்க்க வரும் சிறைக் காட்சியின் போது கொஞ்சம், ‘புதுப்பேட்டை’ படத்தில் தன் குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு குழந்தையுடன் பேசும் காட்சியில் கொஞ்சம் எனப் படத்துக்குப் படம் தன் நடிப்பை மெருகூட்டிக் கொண்டே இருந்தார். ஏறக்குறைய ‘புதுப்பேட்டை’யில் முழுமையாகவே நடிப்பு என்பது என்ன மாதிரி ப்ராசஸ் என்பதைப் புரிந்துகொண்டிருந்தார். ஆனால் அந்தப் புரிதலை பரிசோதித்துப் பார்க்க ‘பொல்லாதவன்’ வரை காத்திருக்க வேண்டியிருந்தது. பொல்லாதவனில் அந்த ஹாஸ்பிடல் காட்சியின் போது டேனியல் பாலாஜியிடம் ‘போட்றா… போடு’ என தனுஷ் சொல்லும் காட்சியில் புரிந்துகொள்ளமுடியும் அவர் முழுமையான நடிகனாக மாறிவிட்டதை. அதே போல ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவைக் கட்டிப் பிடித்துவிட்டு, சட்டென விலக்கிவிட்டு காட்டும் உணர்வுகள், ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரனிடம் “டேய், நீஞ் செய்யிறது எனக்குப் புடிக்கல, செத்துப் போயிர்றானு சொல்லியிருந்தா நானே செத்திருப்பேனேண்ணே” எனப் பேசும் காட்சி, ‘மயக்கம் என்ன’, ‘3’ படங்களில் கோபத்தைக் காட்டும் பல காட்சிகள் கூடவே ஆக்ஷன். பஞ்ச் வசன, காமடி, சென்டிமெண்ட், காதல், நடனம் என ஒரு கமர்ஷியல் நடிகருக்குத் தேவையான அனைத்திலும் டிஸ்டிங்ஷன் வாங்கும் மாணவராக விளங்குகிறார் தனுஷ். அதே நேரம் தன்னுடைய அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படங்களிலும் நடித்துவருகிறார். சொல்லப்போனால் ‘பொல்லாதவன்’, ‘வேலையில்லா பட்டதாரி’ உள்ளிட்ட கமர்ஷியல் படங்களிலும்கூட தனுஷின் சிறப்பான நடிப்பை நின்று ரசிக்க பல தருணங்கள் உள்ளன’ அப்படீன்னு சொன்னதை ஆமோதித்துதானே ஆகோணும்.
இப்போ ஒரு நடிகராக மட்டும் அல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல துறைகளில் சாதனைகளைப் படைத்து வரும் தனுஷ் இதுநாள் வரை மீடியாக்களுக்கென மனசு விட்டு ஒரு தேங்க்ஸ் கூட சொன்னதில்லை என்றாலும் மீடியாக்களின் சார்பில் அவர் கலைப் பணி வளர வாழ்த்துவதே நம் பணி – இப்படிக்கு கட்டிங் கண்ணையா ’