தாறுமாறு கொண்டாட்ட நிலையில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் விதமாக வந்துள்ளது தர்பார். பழைய ரஜினியை திரையில் பார்ப்பது முக்கியமல்ல ..பழைய எனர்ஜியோடு பார்ப்பது தான் முக்கியம். தர்பாரில் ரஜினியின் எனர்ஜி லெவல்..அது வேறலெவல்.

மும்பையில் கமிஷ்னர் பொறுப்பை ஏற்கும் ஆதித்ய அருணாசலம் கஞ்சா பேர்விழிகளை வேரறுக்கும் வேட்டை தான் தர்பார் கதை. மூன்றுமுகம் அலெக்ஸ்பாண்டியனை நெஞ்சில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ். ரஜினியும் தனது முழு அர்ப்பணிப்பையும் படத்தில் வழங்கியுள்ளார். படத்தில் ரஜினியைத் தவிர்த்து ஸ்கோர் செய்வது யோகிபாபு மற்றும் நிவேதா தாமஸ். நிவேதா செண்டிமெண்ட் காட்சியில் உருக்கிறார் என்றால் யோகிபாபு காமெடி காட்சிகளில் கலக்கி இருக்கிறார். வில்லன் சுனில் ஷெட்டி மிரட்டி இருக்கிறார். நயன்தாரா பட்டும் படாமல் வந்து போகிறார். கூடுதல் தகவல் மிகவும் அழகாக இருக்கிறார்

சீறிப்பாயும் திரைக்கதை முன்பாதி படத்தை மின்னல் வேகத்தில் கொண்டு செல்கிறது. முழுக்க முழிக்க ரசிகர்களுக்கான செம்ம விருந்து முன்பாதி. பின்பாதியில் சற்று தொய்வு தெரிந்தாலும் செண்டிமெண்ட் காட்சிகளால் அதைச் சரிக்கட்டி விடுகிறார்கள். க்ளைமாக்ஸில் மட்டும் எதாவது மேஜிக்கை நிகழ்த்தி இருக்கலாம்.

மும்பை டெல்லி என எல்லா ஏரியாக்களையும் அதன் நிறம் மாறாமல் தந்துள்ளார் ஒளிப்பதிவாளர். இசை அமைப்பாளர் அனிருத் அசுர உழைப்பைக் கொடுத்து படத்திற்கு பேருதவி செய்துள்ளார்.

வெறும் கமர்சியல் என்பதோடு நின்று விடாமல் நாட்டில் இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டு வருவது அரசு மற்றும் அதிகாரிகளின் கடமை என்பதையும் படம் பறை சாற்றுகிறது. தர்பார் குடும்பத்தோடு கொண்டாட வேண்டிய அட்டகாசப் பொங்கல்!