ஒரு திரைப்படத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் சிறிய தவறு செய்தாலும் அதைப் பெரிதுப்படுத்தி சுட்டிக்காட்டத்தான் வேண்டும். அதேபோல் அனுபவம் குறைவாக உள்ள புதியவர்கள் பெரிய தவறு செய்திருந்தாலும் அதை நாம் மென்மையாகத் தான் அணுக வேண்டும்.

இனி கைலா படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

கதையின் நாயகி பேய் இருப்பதாக பலரும் நம்பும் வீட்டைப் பற்றி ஒரு ஸ்டோரி எழுத விழைகிறார். அதனால் வரும் ஆபத்துகளைப் பற்றி அவர் அஞ்சவில்லை. முடிவில் அந்த வீட்டில் பேய் இருந்ததா..அப்படி இருப்பதாகச் சொல்லப்படும் பேயின் மோட்டிவ் என்ன என்பது தான் கைலாவின் கதை.

எதிர்நாயகனாக பல புதிர் போடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆன பாஸ்கர் சீனுவாசன்.
இவர் சர்வதேச கராத்தே பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. உடலில் இருக்கும் கம்பீரம் நடிப்பில் முழுதாக வராவிட்டாலும் பெரும் பழுது ஏற்படாத வகையில் அவரின் கதாப்பாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். நாயகியாக வரும் தானா நாயுடுவை விட மிக அழகாக ஸ்கோர் செய்கிறார் ப்ளாஸ்பேக்கில் வரும் கெளசல்யா. திரையில் தோன்றும் மற்ற நடிகர்களின் அனுபவமின்மை சில இடங்களில் அப்பட்டமாகத் தெரிகிறது. அது ஒரு சிறு குறை.

ஒளிப்பதிவு பின்னணி இசை எடிட்டிங் போன்றவற்றை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்றாலும் கதைக்கு அந்த டிப்பார்ட்மெண்ட் எந்தத் தீங்கும் நிகழ்த்தவில்லை என்பது சுபம்.

இந்தப்படத்தின் அடிநாதம் பழிவாங்கல் என்றாலும் அதை யூகிக்க முடியாத அளவில் திரைக்கதையை அமைத்ததில் கைலா கைத்தட்டல்களைப் பெறுகிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் சிறு ஆச்சர்யம் தந்தது பெரும் ஆச்சர்யம். முன்பாதியின் கதை நகர்வுக்கும் பின்பாதியின் கதை நகர்வுக்கும் அவ்வளவு வித்தியாசம்.

வித்தியாச முயற்சியை சிற்சில பிழைகளோடு செய்திருந்தாலும் செய்தவர்கள் புதியவர்கள் என்பதால் இந்தக் கைலாவை வரவேற்கத்தான் வேண்டும்