படமல்ல பாடம் என்ற வகையிலான அக்மார்க் சமுத்திரக்கனி படம் தான் அடுத்த சாட்டை. தமிழ்சினிமாவில் தானொரு ஆண்தேவதை என்பதை படத்திற்கு படம் நிறுவி வருகிறார் சமுத்திரக்கனி. அவர் வசனங்களில் அனல் பறக்கிறது. நிகழ்கால அரசியலையும் போட்டுப்பொளக்கிறார். குறிப்பாக மாணவர்களுக்கான நாடாளுமன்றம் என்ற ஏரியாவெல்லாம் அதகளம். மேலும் இப்படத்தின் அடுத்த பலம் தம்பி ராமையா. மனிதர் வாயைத்திறந்தாலே வெடி வெடிக்கிறது. திரையில் பட்டாசு கொளுத்துகிறார். நிறைய இடங்களில் வசனத்தை டப்பிங்கில் சேர்த்து இருந்தாலும் ஆசம். அதுல்யா ரவி தவிர மாணவர்களாக நடித்த யாரும் அவ்வளவாக சோபிக்க வில்லை.

ஜாதிமதம் பார்க்காத பாலின பேதம் பார்க்காத மாணவர்கள் தான் நமக்கு முதல்தேவை என்பதை படம் போதிக்கிறது..ஒருசில இடங்களில் போதனை மட்டும் தான் பண்ணுவேன் என்று படம் சாதிக்கிறது. அது சில இடங்களில் நெருடினாலும் சொல்ல வரும் விசயம் மிக முக்கியம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

முதல் காட்சியிலே இது எப்படியான படம் என்பதை இயக்குநர் அழகாக உணர்த்தி இருக்கிறார். இசையில் பெரிதாக இனிப்பு இல்லாவிட்டாலும் எங்குமே கசப்பு இல்லை. படத்திற்கு தேவையான வசனங்களை மிகச்சிறப்பாக எழுதி இருக்கிறார் இயக்குநர் அன்பழகன்.

இப்படத்தில் வருவது போல சமுத்திரக்கனி சொல்வதை மாணவர்களும் ஆசிரியர்களும் கேட்டு நடந்துகொண்டால் வருங்காலத்தில் மட்டும் அல்ல நிகழ்காலத்திலே நம் சமூகத்தில் அதியசம் நடக்கும். அடுத்தசாட்டை கருத்துக்கோட்டை அவசியம் காணுங்கள்