பரியேறும் பெருமாளின் வெற்றிக்குப் பிறகு பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவி படத்தின் இயக்குநர்
அதியன் ஆதிரை பேசியதாவது,

“தோழர் என்ற வார்த்தையை சொன்னதிற்காக என்னை வேலையை விட்டு துரத்தி இருக்கிறார்கள். ஆனால் பா.ரஞ்சித் என்னை அதே அடையாளத்தோடு அறிமுகப்படுத்துகிறார். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இரும்புக்கடையில் வேலைசெய்யும் போது சுவாசிக்கிற காற்று மிகவும் கொடியது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்கள் எத்தனையோ பேர் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் அண்ணன் எனக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் இருந்துள்ளார். இரு குழந்தைகளுக்கு அப்பாவாக பா.ரஞ்சித் அண்ணனிடம் வந்து சேர்ந்தேன் அதன்பின் எனக்கு கஷ்டமே வந்ததில்லை. குண்டு படத்தில் ஒரு லாரி டிரைவரின் கதை இருக்கிறது. இரும்புக்கடையில் வேலை செய்கிறவர்களின் வலியை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருத்தனின் உழைப்பைச் சுரண்டும் சமூகமாகத்தான் இந்த சமூகம் இருக்கிறது. இந்த சினிமா உன் எதார்த்தை அழித்துவிடக்கூடாது என்று பா.ரஞ்சித் சொன்னார்.

இந்தப்படம் மிக முக்கியமான ஒரு விசயத்தைப் பதிவுசெய்யும். இந்த சமூகத்தில் நடக்கும் எல்லா விசயங்கள் மீதும் நாம் ஒரு கண் வைக்க வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும். இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு பா.ரஞ்சித், “நீலம் புரொடக்சனுக்கு பெரிய வாசலைத் திறந்து வைத்துவிட்டாய்” என்றார் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தக்கதைக்குள் தினேஷ் வந்ததும் எனக்கு ஒரு கர்வம் வந்தது. ஏன் என்றால் அட்டக்கத்தி படம் வந்தபிறகு எனக்கான கதைகளையும் படம் பண்ணமுடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.
தோழர் ஆனந்தி அவங்க மனசு போலவே படத்தில் அழகாக நடித்துள்ளார். ரித்விகா என் மனதுக்கு நெருக்கமான தோழி. அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் பார்த்த அனைவரும் முனிஷ்காந்த் நடிப்பை பாராட்டி இருக்கிறார்கள். படத்தில் அனைவருமே மிகச்சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கேமராமேன் கிஷோர் ரொம்ப நெருக்கமான மனிதர். எமோஷ்னலா நம்மோடு கனெக்ட் ஆகிறவர்களிடம் வொர்க் பண்ணும்போது அது சிறப்பாக வரும். இசை அமைப்பாளர் தென்மா அழகாக பண்ணி இருக்கிறார். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்றார்