ஒரு மாஸ் படம் பண்ண வேண்டும் கமர்சியலாகவும் அப்படம் பாஸ் பண்ண வேண்டும் என்று விஜய்சேதுபதி எடுத்த முடிவின் விளைவு தான் சங்கத்தமிழன். இந்தப்படத்தை சங்கடமே இல்லாமல் விஜய்சேதுபதியை ரசிக்கும் சங்கத்தமிழன்கள் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை

மக்கள் நலனில் அக்கறையுடைய நல்லவர் விஜய் சேதுபதி. அவரது அப்பாவான நாசரை, ஊரிற்குள் காப்பர் ஃபேக்டரி கொண்டு வர முட்டுக்கட்டையாக இருக்கிறாரெனக் கொன்று விடுகின்றனர். எப்படியாவது நம்மை நம்பிய மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக, அந்த காப்பர் ஃபேக்டரியை மூடிவிட வேண்டுமென்பது நாசரின் இறுதி ஆசை. தந்தையின் அவ்வாசையை விஜய் சேதுபதி எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் சங்கத்தமிழன் படத்தின் கதை.

விஜய் சேதுபதி, இப்படத்தில் நடிப்பதை விட மாஸ் காடுவதிலேயே அதிக ஈடுபாடு காட்டியுள்ளார். அது ரசிக்கும் படியாகவும் இருக்கிறது.

இசையால் விவேக் – மெர்வின் இசைத்துத் தள்ள, விஜய் சேதுபதியும் சகட்டுமேனிக்கு அனைவரையும் அடித்துத் தள்ளுகிறார். காட்சிக்கு காட்சி அடித்தாலும் செண்டிமெண்ட் காட்சிகள் மூலம் ஸ்கோர் பண்ணும் வாய்ப்பும் விஜய் சேதுபதிக்கு இருக்கிறது. அத்தகைய காட்சிகள் எல்லாம் படத்தை தம்ப் பிடித்து, காப்பாற்றுகிறது.
சூரியுடனான காமெடிக் காட்சிகள் மிகச் சரியாகக் கைகொடுக்கப்பட்டிருக்கிறது. . படத்தின் முதல் பாதி முழுவதும் சரியான நோக்கமற்று அலைபாயும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் அவசரமாக ஸ்டெர்லைட் பிரச்சனையைக் கையிலெடுத்து அசூர வேகத்தில் பறக்கிறது. விஜய் சேதுபதியின் மாஸ் மூலம் ஸ்டெர்லைட் பிரச்சனையைத் தீர்த்து வைக்கின்றார் இயக்குநர். மக்கள் போராட்டம் தான் வெற்றிக்குக் காரணமென விஜய் சேதுபதி க்ளைமேக்ஸில் சொல்கிறார், படமும் அந்தப் புள்ளியை தொடவே செய்கிறது . சம காலத்துப் பிரச்சனையை, அதன் உண்மைத்தன்மை மாறாமல் இன்னும் அழுத்தமாக பதிந்திருக்கலாம் என்பது நம் அவா.

ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என படத்தில் இரண்டு கதாநாயகிகள். நாயகன் மீது காதலில் விழ ராஷி கண்ணாவும், மாமாவைத் தவிர தனக்கு வேறு உலகமில்லை என உருகும் அக்மார்க் கிராமத்துப் பெண்ணாக நிவேதா பெத்துராஜும் நடித்துள்ளனர். ராஷி கண்ணாவை விட, மரம், செடி, விவசாய நிலம் முதலியவற்றின் மீது காட்டும் அக்கறையாலும், அதற்காகப் போராடுவதாலும் நிவேதா பெத்துராஜ் ஸ்கோர் செய்கிறார். படத்தின் அருமையான பகுதிகளில் , நிவேதா பெத்துராஜ் மேற்கொள்ளும் போராட்டமும் ஒன்று.

விஜய் சேதுபதி திரையில் வந்தாலே, இருக்குமத்தனை இசைக்கருவிகளையும் உச்சஸ்துதியில் அலறவேண்டுமென கண்டிஷனாக இசையமைப்பாளர்களிடம் சொல்லியிருப்பார் போல் இயக்குநர். வாசித்துத் தள்ளியுள்ளனர் இரட்டை இசையமைப்பாளர்களான விவேக்கும் மெர்வினும்.
கதை கோரும் பட்சத்தில் மாஸ் காட்டுவதற்குப் பதிலாக, ‘மாஸ் காட்டவேண்டும்’ என்ற ஒற்றை நோக்கத்தில் அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள். விஜய்சேதுபதிக்காகவே நெய்யப்பட்ட கதையில் விஜய் சேதுபதி நெய்போல மணக்கிறார். சின்னச் சின்ன குறைகள் இருக்கிறது தான். அதைச் சரிசெய்து விஜய் சந்தர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், உண்மையிலேயே மாஸாக வந்திருக்கும் படம். அதனால் என்ன? லிப்ரா புரொடக்சனுக்கு இது பாஸ் ஆகும் படமாகத்தான் கணக்கில் சேரும். ஏன் என்றால் படத்தில் கெத்து இருக்குறது.

.