“அவிச்ச முட்டையை ஆம்லெட்டுன்னு சொன்னா எப்படிய்யா நம்புறது?” என்று கேட்டால்

“யோவ் ஆம்லெட்டும் முட்டையில இருந்து தானய்யா வருது” என்கிறது ஆக்‌ஷன் படம்.

சுந்தர் சியின் புதிய முயற்சியில் சிக்குண்ட விஷால் படத்தில் அடி அடியென அடிக்கிறார். ஒருசில இடங்களில் மட்டும் நடிக்கிறார். மற்ற இடங்களில் அவரது முகம் அநியாயத்திற்கு டல் அடிக்கிறது. தமன்னாவை விட ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பு நெஞ்சில் இதமாக இருக்கிறது. வில்லியான அகன்ஷா பூரி…வாவ்..வெரி ஸாரி. வாவ் என்பதற்கு மேல் அவரைப் பற்றி சொல்லத் தோணவில்லை.

இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது என்பது போன்ற திரைக்கதை தான் அநியாய அலுப்பு. முதலில் கதையைச் சொல்வோம்.

முதல்வர பழ கருப்பையா தன் மூத்த மகனான ராம்கி தான் இனி அடுத்த முதல்வர் என ஒரு கூட்டணி மீட்டிங்கில் அறிவிக்கிறார். பழ.கருப்பையாவின் இரண்டாவது மகனான விஷால் அந்தக் கூட்டத்தில் தான் இருக்கிறார். அங்கு வெடிகுண்டு வெடிக்கிறது. ராம்கி காலியாகிறார். வெகுண்டழும் விஷால் அடுத்து என்ன செய்தார் அண்ணனைக் கொன்ற சர்வதேச சதியாளர்களை எப்படி களையெடுத்தார் என்பது தான் ஆக்‌ஷன்.

பக்கத்தூர்ல போயி சும்மா பல்லுக்குத்திட்டு நின்னாலே ஆயிரத்தெட்டு கேள்வி கேட்குற உலகம் இது. ஆனால் விஷால் பாகிஸ்தான் போய் பாதுசா சாப்பிடுவது போல வில்லனை அள்ளிப்போட்டு கொண்டு வருகிறார். இதற்கெல்லாம் கருடபுராணத்துல தண்டனை உண்டான்னு தெரியல. ரசிகனை சமரசம் செய்யும் எந்த முயற்சியும் எடுக்காததாலே ஆக்‌ஷனுக்கு சோல்டரை தூக்கி தம்ஸ் அப் காட்ட முடியவில்லை.