“ஒரு லாரியுடன் ஒரு ஸ்டோரி இருக்கு சார். படத்தில் உங்களுக்கு ஜோடி கிடையாது லாரிதான் ஜோடி. கூடவே விஜய் டிவி காமெடியன் தீனா அஞ்சாதே நரேன் இவங்கதான் இருப்பாங்க” மேற்சொன்னவற்றை ஒரு பிரபல நடிகரிடம் படத்தின் கதையாகச் சொன்னால் அவர் அதை எப்படி ஏத்துப்பார்? மற்றவர்கள் எப்படி ஏத்துப்பார்களோ தெரியாது கார்த்தி பாஸிட்டிவாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால் தான் ஒரு அட்டகாசமான படமாக கைதி கிடைத்திருக்கிறது.

போதை மருந்து கும்பலுக்கும் போலிஸுக்கும் உள்ள மோதலில் ஆயுள் கைதியாகி ரிலீஸான கார்த்தி வந்து போலீஸோடு சேர்ந்து கொள்கிறார்..வில்லன்களால் மயக்கப்படிக்கப்பட்ட காவலதிகாரிகளை லாரியில் கரை சேர்க்க வேண்டிய பொறுப்பை கார்த்தியிடம் கொடுக்கிறார் போலீஸ் நரேன். அதற்கு ஈடாக கார்த்தி தனது மகளின் படிப்பை பார்த்துக் கொள்ளும்படி கோருகிறார். ஓர் இரவுக்குள் நடக்கும் அந்தப்பயணத்தில் என்னென்ன கதைகள் எல்லாம் நடந்து என்னென்ன முடிவுகள் வருகிறது என்பது தான் படத்தின் கதை.

ஒற்றை ஆளாக தன் அசுர நடிப்பால் படத்தைத் தூக்கி நிறுத்தி இருக்கிறார் கார்த்தி. மகள் மீதுள்ள பாசத்தால் அவர் செய்யும் ஒவ்வொரு காரியங்களும் மனதை உருக்குகிறது..கூடவே நரேனின் நடிப்பும் படத்தை கரை சேர்க்க பெரிதும் உதவி இருக்கிறது. காமெடியன் தீனாவின் சூழலுக்கேற்ற நடிப்பு அருமை. பல படங்களில் துக்கடா கேரக்டர்களில் வந்துபோகும் சார்ஜ் இதில் அசத்தி இருக்கிறார். கார்த்தியின் மகளாக வரும் குட்டிப்பாப்பாவும் சிறப்போ சிறப்பு

அன்பு அறிவு இருவரின் ஸ்டண்ட் சீக்வென்ஸ்களும் வேறலெவல் தரம். படத்தின் ஆகப்பெரும் ஆன்மா சாம்.சி.எஸ்ஸின் பேக்ரவுண்ட் ஸ்கோர் தான். கதையின் ஓட்டத்திற்கு என்ன தேவையோ அதை அச்சுப்பிறழாமல் தந்திருக்கிறார் இசை அமைப்பாளர். பிலோமின் ராஜின் எடிட்டிங்கும், சத்யன் சூரியனின் சினிமாட்டோகிராபியும் கைதியின் அதிதீவிர டிப்பார்ட்மெண்ட்.

ஒரு திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்ற லாவகத்தை வளரும் இயக்குநர்கள் வளரும் இயக்குநரான லோகேஷ் கனகராஜிடம் கத்துக்கலாம். படத்தின் ரைட்டிங்கிலும் ஸ்டேட்சிங்கிலும் அத்தனை நேர்த்தி. வரும் காலங்களில் அவரிடம் இருந்து மேலும் பல தரமான படைப்புகளை எதிர்பார்க்கலாம். தரமான படங்கள் தான் தன் டார்கெட் என்பதில் குறியாக இருந்து அதை சிரமேற்கொண்டு தயாரித்து வரும் எஸ்.ஆர் பிரபுவிற்கும் கைதி சல்யூட்.

படத்தின் அடிநாதமான குகைன் மாபியா மேட்டரும், யார் மெயின் வில்லன் என்ற சுவாரசிய ஏரியாவும் அப்படியே மீகாமன் படத்தை நினைவுப்படுத்துகிறது. படத்தின் நீளமும் அங்காங்கே தெரியும் இறுக்கமும் சரி செய்யப்பட்டிருந்தால் கைதி இன்னும் பலமான பிகிலைப் போட்டிருப்பான். இருப்பினும் மாற்று சினிமாவை நோக்கி தமிழ்சினிமா செல்வதற்கு கைதியும் ஒரு காரணமாய் இருப்பதால் இந்தக் கைதியை முன்மொழிந்து வழிமொழிவோம்