சிங்கப்பெண்களை பெற்றெடுத்த ஒவ்வொரு தந்தையையும் பிகில் போட வைத்துள்ளது விஜய் அட்லீ கூட்டணி.

கத்தி சண்டை என்று காலத்தைக் கடத்திய ராயப்பனுக்கு தன் மகன் மைக்கேலின் விளையாட்டுக்கலை மூலமாக தன் ஏரியா மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசைக்கு எதிரியாய் எதிரிகள் சூழ, அவர்களை எப்படி மைக்கேல் எதிர்கொண்டார் என்பது தான் பிகில் கதை.

கதையின் துவக்கம் சற்று சுணக்கத்தோடு இருந்தாலும் நயன்தாரா விஜய் லவ் போர்ஷன் காமெடி உள்பட யோகிபாபு அட்ராசிட்டி குறிப்பாக விஜய்யின் குறும்புத்தன பெர்பாமன்ஸ் எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி இதுதான் கதை என்று ரூட் போடுவதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. அதன் பின் கால்பந்தில் கப் அடிக்க வேண்டும் என்ற ராயப்பன் விஜய்யின் கனவை சிங்கப்பெண்களைக் கொண்டு மைக்கேல் விஜய் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை படு சுவாரசியமான முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குநர் அட்லீ.

ஏ.ஆர் ரகுமான் பின்னணி இசை, ரூபனின் எடிட்டிங் இரண்டும் மாஸ் சீன்களுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவில் வழக்கம் போல மாஸ்.

தன்னம்பிக்கைக்கு முகம் முக்கியம் கிடையாது என்ற பாசிட்டிவான விசயத்தை செம்ம பாசிட்டிவான முறையில் சொல்லிருக்கதாலே பிகிலுக்கு பெரிய பிகில் போடலாம்.

கதிர், ஆனந்த்ராஜ் மனோபாலா, தீனா, விவேக், ஆகியோரை இன்னும் நன்றாக யூஸ் பண்ணி இருக்கலாம் என்று தோன்றியது. இந்துஜா உள்ளிட்ட கால்பந்தாட்ட நாயகிகள் அனைவரும் படத்தை தங்கள் தோள்களில் தாங்கி இருக்கிறார்கள்.
பிகில் சில சமரசங்கள் இருந்தாலும் கொண்டாட வேண்டிய படம்