நான் சென்னைக்கு வந்து சினிமா நிருபர் ஆனபோது என்னை பேக் அப் பண்ணி திருப்பி அனுப்பவே நிறைய பேர் காத்துக்கொண்டிருந்தார்கள், அலுவலகத்திலும், வெளியிலும். அந்த நேரத்தில் என்னை முதலில் தோள் கொடுத்து வரவேற்று ஆதரவளித்த தோழர் நிகில் முருகன்.

நான் அவருக்கு அறிமுகமான சில நாட்களிலேயே எல்லோர் முன்னாலும் “எனக்கு ரொம்ப பிடித்த சினிமா பத்திரிகையாளர் மீரான்” என்று சொன்னவர் அவர். அவர் எங்கள் ஊருக்கு பக்கத்தில் உள்ள புளியரையை சேர்ந்தவர் என்பதும். எனக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய எங்கள் ஊர் நூலகர்தான் அவர் மாமனார் என்பதும் எனக்கு பின்னாளில்தான் தெரியும். பூர்வ ஜென்ம தொடர்பு மாதிரி, இது ஒரு எதிர்பாராத தொடர்பு.

அப்போதெல்லாம் தனது காரின் பின் கண்ணாடியில்
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பறுவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரை போலே – நான்
வீழ்வே நென்று நினைத்தாயோ…

என்ற மகாகவியின் வரிகளை எழுதி வைத்திருப்பார். எனக்கு அவரை ஈர்த்ததற்கு முதல் காரணம் இந்த வரிகள்தான். பாரதியையும், பெரியாரையும், வள்ளுவரையும் நேசிக்கிறவன் நிச்சயம் நியாவானாகத்தான் இருப்பான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. என் நம்பிக்கை வீண்போகவில்லை.

ரஜினி படங்களை பற்றி நான் எழுதிய புத்தகத்தை ரஜினியின் கையில் கொண்டு சேர்ப்பதற்கு வழிதெரியாமல் இருந்தேன். அப்போது அதை தன் பணியாக எடுத்துக் கொண்டு 3 நாளில் உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தவர் நிகில். என் சினிமா கேரியரில் மிகப் பெரிய விஷயம் ரஜினிகாந்த் என்னையும், என் குடும்பத்தை அழைத்து கவுரவித்தது. அதற்கு காரணமாக இருந்தது நிகில் முருகன்.

இது தவிர தனிப்பட்ட எந்த உதவிகளுக்காகவும் நான் அவரை அணுகியதில்லை. அவரும் “நான் ஏதாவது உங்களுக்குச் செய்யணுமா” என்னை கேட்டதில்லை. இரண்டு முறை விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஒரே ஒரு போன் அவருக்கு பண்ணி இருந்தால் என் ஆஸ்பத்திரி பில் செட்டிலாகியிருக்கும். நானும் கேட்கவில்லை. “என்னாச்சு மீரான்” என்று அவரும் கேட்டதில்லை.

அறிமுக பத்திரிகையாளர்களுக்கும், நிகிலுக்கும் என்ன தொடர்போ… அதே தொடர்புதான் நிகிலுக்கும் எனக்குமான தொடர்பு. அப்படியிருந்தும் நிகிலை பிடிப்பதற்கு காரணம்… அவரின் தொழில் நேர்மை. எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைக்கிற அவரது குணம்.

அதையும் தாண்டி ஒரு சாதாரண குக்கிராமத்திலிருந்து வந்து சினிமாவில் அவர் சார்ந்த மக்கள் தொடர்பாளர் பணியில் உச்சம் தொட்டவர். 6 மொழிகளில் பேசத் தெரிந்தவர். 4 மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்தவர். சாதிக்க இது போதாதா.

நான் ஒரு தவறு செய்து விட்டால் அதை பற்றி மற்றவர்களுடன் புலம்பிக் கொண்டிருக்க மாட்டார். அதை என்னிடமே “நீங்கள் இப்படிச் செய்தது தவறு” என்பார். அவர் தவறு செய்து நான் கேட்டால் இவன் யார் என்னை கேட்பதற்கு என்று நினைக்காமல் அதற்கான விளக்கத்தைக் கொடுப்பார்.

எத்தனையோ பேரை உதவியாளர்களாக்கி, அவர்களை பி.ஆர்.ஓ ஆக்கி அழகு பார்த்திருக்கிறார். அவரால் விலக்கப்பட்டவர்கள், அல்லது அவரை விட்டு விலகியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் தொழில் ரீதியாக மோதுவாரே தவிர. அவர்களை அழித்து விட வேண்டும் என்று ஒரு போதும் நினைக்க மாட்டார்.

நிகில் மீது பொது வெளியில் நிறைய விமர்சனங்கள் உண்டு. நானே விமர்சித்திருக்கிறேன். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி அவர் மிகச் சிறந்த பண்பாளர், தொழில் நேர்மையாளர்.தயாரிப்பாளர் பெயரை சொல்லி பத்திரிகையாளரையோ, பத்திரிகையாளர் பெயரைச் சொல்லி தயாரிப்பாளரையே ஏமாற்றாதவர். ஏமாற்றத் தெரியாதவர்.

புகழ்பெற்ற அத்தனை மனிதர்களும் விமர்சனங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். அதற்கு நிகில் விதிவிலக்கல்ல… விமர்சனங்களைத் தாண்டி அவர் அனைத்து வெற்றிகளையும் பெற அவரது 25வது ஆண்டில் வாழ்த்துகிறேன்.

✍@+91 98409 07297