ஒருநாவலை படமாக்கணும் என்றால் அதற்கு அசுரத்தனமான உழைப்பு வேண்டும்..வெற்றிமாறன் எப்போதும் உழைக்கத்தயங்காதவர். அதனால் தான் அவரது வெற்றி மாறாமலே இருக்கிறது.

வெக்கை என்ற நாவலை எழுதியவர் பூமணி. அவரிடம் அனுமதி வாங்கி மூலக்கதை என அவரது பெயரையும் டைட்டிலில் போட்டிக்கிறார்கள். ஒரு எழுத்தாளருக்கு இப்படியான கிரடிட் கொடுக்க வேண்டியது அவசியம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனுஷிடம் நிலம் இருப்பது ஆடுகளம் நரேன் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. அதை அவர்கள் வன்மமாக வெளிப்படுத்துகிறார்கள். தனுஷின் மூத்தமகன் டி.ஜே அதற்கு எதிர்வினையாற்ற அவரை கொல்கிறார்கள் நரேன் வகையரா. நிலைகுலைந்து போகும் தனுஷும் அவரது குடும்பமும் அடுத்த என்ன செய்தது? என்பது தான் அசுரன் படம்.

தனுஷ் நடித்த படங்களில் இது அவருக்கு மாஸ்டர் பீஸ். மிகப்பிரமாதமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருக்கு சற்றும் சளைக்காமல் மஞ்சுவாரியார், பசுபதி மிரட்டி இருக்கிறார்கள். டி.ஜே, கென், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ், ஆடுகளம் நரேன், பவண் என படத்தில் தோன்றி இருக்கும் நடிகர்கள் எல்லாம் நம் மனதில் இருந்து மறைய வெகுகாலமாகும். பன்னிப்பிடிக்கிற ஒரு கேடர்கடரின் நடிப்பும் சிறப்பு.

படத்தின் ஆகப்பெரும் பலமாக வேல்ராஜின் விஷுவல்ஸ் இருக்கிறது. பனங்காடு, பாறைக்காடு என அவர் கேமரா வைக்கும் எல்லா இடங்களும் அசுரத்தனமாக இருக்கிறது. ஜீவி பிரகாஷ் இசையில் ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டி எழுப்பி இருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் களத்திற்கு தகுந்த பலம். நெல்லை வட்டார வழக்கையும் மிகச்சிறப்பாக எழுதி இருக்கிறார்கள். முன்பாதியில் மிக வேகமாகவும் பதட்டத்துடணும் நடக்குற கதை பின்பாதியில் சின்னதாக சறுக்குவது போல ஒரு தோற்றம் தெரிகிறது. சாதியப்பிரச்சனைகளை இன்னும் கூட கொஞ்சம் கவனமாக கையாண்டிருக்கலாம் என்றே தோன்றியது. ஆனால் அதையெல்லாம் மறக்கடித்து விடுகிறது படத்தின் முடிவில் தனுஷ் பேசும் வசனங்கள். இப்படத்திற்கு இதுதான் மிகச்சிறந்த முடிவு என்ற தெளிவில் சமூக அக்கறையோடு ஜெயித்துள்ளார் வெற்றிமாறன். தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியின் உண்மையான வெறித்தனம் இந்த அசுரன்.