ஈகோவை யூ கோ என துரத்தாத வரையில் காதலர்களுக்குள் பிரச்சனை வந்துகொண்டே தான் இருக்கும் என்ற ஒற்றை வரி தான் 100% காதல் படத்தின் கதை. நிறையப் படங்களில் பார்த்த காட்சிகள் கேட்ட வசனங்கள் இருந்தாலும் காதல் சம்பந்தப்பட்ட விசயங்களை கேட்பதும் பார்ப்பதும் சலிக்கவே சலிக்காது அல்லவா! அதுதான் இப்படத்தின் பர்ஸ்ட் ப்ளஸ் பாயிண்ட்.

ஜீவி பிரகாஷுக்கு சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்குப் பிறகு பக்காவான ஸ்கிரீன் சிக்னல் விழுந்து விட்டது. அந்தப்படத்தில் பெண்களின் ஆதரவைப் பிடித்தவர் இந்த 100% காதலில் குழந்தைகளுக்கான ஹீரோவாக ஜொலிக்கிறார். ஷாலினி பாண்டே மீது வரும் காதல் மற்றும் பொறாமையில் மனிதர் மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். கூடவே அவருக்கு காமெடியும் வருவது கூடுதல் பலம். ஷாலினி பாண்டே குழந்தைத்தனமாக பேசும்போதும், மாமா மாமா என்று உருகும் போது அசத்துகிறார். இடைவேளைக்குப் பிறகு வந்து படத்திற்கு புதிய உத்வேகத்தைத் தருகிறார் தம்பி ராமையா. நாசரின் அனுபவம் அவரது க்ளைமாக்ஸ் நடிப்பில் மிளிர்கிறது. ஜெயசித்ரா, ரேகா, தலைவாசல் விஜய், ஆர்.வி உதயகுமார் உள்ளிட்ட படத்தில் தோன்றும் முக்கியப் பாத்திரங்கள் எல்லாம் தங்களின் முக்கியம் உணர்ந்து நடித்துள்ளனர். மிக முக்கியமாய் படத்தில் வரும் குட்டீஸ் எல்லாம் வெகு சிறப்பாக அசத்துகிறார்கள்.

ஜீவி பிரகாஷின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு தேவையான தெம்பை கொடுத்துள்ளது. ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் தரமான வேலை.

முன்பாதியில் படம் சற்று நீளம் போல் தோன்றுவதை பின் பாதியில் மிக அழகாக சரிகட்டி விடுகிறார் இயக்குநர் சந்திரமெளலி. 100% காதல் 100% எண்டெர்டெயின்மெண்ட்