மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணி இருக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு சந்திப்பு இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் சிரஞ்சீவி பேசியதாவது,

“நடிகனாக நான் பிறந்த சென்னைக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. R B சௌத்திரி படத்தை வாங்கியதற்கு அவருக்கு மிகப்பெரிய நன்றி. “சைரா நரசிம்மா ரெட்டி” எனது நெடு நாள் கனவு. பல காலமாகவே பட்ஜெட் பெரிதாக இருந்ததால் உருவாக்க முடியாத கனவாக இருந்தது. நான் சிறு இடைவேளைக்கு பின் சினிமா வந்த பிறகு தமிழில் வந்த “கத்தி” படத்தை ரீமேக் செய்து நடித்தேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏன் இப்போது சைரா செய்யக் கூடாது என நினைத்தேன் பாகுபலியின் வெற்றி நிறைய நம்பிக்கை தந்தது. ஏன் இந்தப்படத்தை நாம தயாரிக்கக் கூடாது என ராம்சரணைக் கேட்டேன் அவர் அவருடைய இரண்டாவது படத்திலேயே வரலாற்று கதை காஸ்ட்யூம் போட்டு நடித்து விட்டார். நான் 150 படம் நடித்தும் வரலாற்று கதையில் நடிக்கவில்லை. இந்தப்படம் அந்தக் கனவை நனவாக்கி தந்துள்ளது. தமிழில் கேட்டுக்கொண்டவுடனே கமல் குரல் தந்துள்ளார் அரவிவிந்த் சாமி டப்பிங் பேசியுள்ளார் இருவரின் அன்பிற்கும் நன்றி. இது ஒரு மொழிக்கான படமில்லை. வரலாற்றில் மறக்கப்பட்ட வீரனின் கதை அனைத்து மொழிக்குமான படம், இந்தியப்படம். இப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவும், ஆசிர்வாதமும் படத்திற்கு வேண்டும். வாழ்த்துங்கள் என்றார்.