இந்த உலகத்தில் எது மாறினாலும் அன்பு என்பது ஒருபோதும் மாறிடாது என்பதை தன் படங்கள் மூலமாக உணர்த்தி வரும் பாண்டியராஜ் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் அதையே அழகாக பதிவு செய்துள்ளார்.
பெரியப்பாக்கள், மாமாக்கள் என சுற்றம் சூழ இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு தங்கை என்றால் உயிர். தந்தை இல்லாத அண்ணனும் தங்கையும் சொந்தத்தை அனுசரித்து வாழ்ந்து வந்தாலும் தங்கையின் வாழ்வு வழுக்கிக் கொண்டே போகிறது. அதற்கான காரணத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. தங்க்கைக்கு திருமணம் முடித்து வைத்த பின்னும் தங்கைக்கு சில பிரச்சனைகள் வர சிவா எப்படி அனைத்தையும் சரி செய்து பாசக்கொடி ஏற்றுகிறார் என்பது தான் கதை.

தங்கைக்காக சிவா செய்யும் சில செயல்கள் உருக வைக்கிறது. இப்படியான ஒரு அண்ணனுக்காக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் தன் திருமண முடிவை எடுத்துள்ளார் என்ற விசயம் தெரிய வரும்போது அடடா..சிறப்பு.

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் இப்படம் ஒரு அசூர பாய்ச்சல். நிச்சம் இருவரும் ஸ்கிரீனில் போட்டிப்போட்டு நடித்துள்ளனர். பாரதிராஜா, வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், நட்டி, சூரி, சூரியின் மகன் என படத்தில் வரும் அத்தனை கேடர்க்டர்களும் சிறப்பு செய்திருக்கிறார்கள். சிரிப்புக் காட்சிகள் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் சிவகார்த்திகேயன் செய்யும் ஸ்கோர் நல்ல பசியுள்ள ரசிகனுக்கு பொன்னி அரிசி சோறு.

முதல்பாதியில் இருந்தே படம் படிப்படியாக எமோஷ்னலை கடத்துகிறது. அப்படியே சென்று ஒரு இடத்தில் நம் நெஞ்சைப் பதம் பார்த்து முடிகிறது படம். நிச்சயம் கடைக்குட்டி சிங்கம் போல ஒரு நேர்த்தியான குடும்பப்படம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

டி.இமான் பின்னணி இசை படத்தில் ரசிகர்களை பல இடங்களில் ஆசுவாசப்படுத்தி, பல இடங்களில் அமர்க்களப்படுத்துகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு கிராம வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட்டுப் போ என்கிறது. ரூபனின் எடிட்டிங்கிலும் குறையில்லை. ஹீரோயின் கதாபாத்திரத்தை மட்டும் இன்னும் ஸ்ட்ராங் பண்ணி இருக்கலாம். டூயட் பாடல்களும் பெரிதாக படத்திற்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால் தனியாக கேட்க பாடல்கள் நன்றாக இருக்கிறது.

“சொந்தத்துல தோத்துப்போறவனை யாராலும் ஜெயிக்க முடியாது” அப்படின்னு படத்தில் ஒரு வசனம் வரும். அதுபோல் செண்டிமெண்ட் விசயங்களை சரியாகப் பொருத்தினால் ஒரு படத்தின் வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. அதற்கு நம்ம வீட்டுப்பிள்ளை உதாரணமாகும்