ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கட்சி தொண்டர்கள், முன்னாள் நிர்வாகிகள் பலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை சந்தித்து அரசியலுக்கு வரும்படி வற்புறுத்தி வருகிறார்கள்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் தீபா வீட்டுக்கு தினமும் வருகிறார்கள். வீட்டின் முன்பு திரளும் தொண்டர்கள் மத்தியில் தீபாவும் பேசுகிறார்.

நேற்று கோவை, திருச்சி, தூத்துக்குடி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் குவிந்திருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் தீபாவை சந்தித்து பேசினார்கள்.

எனக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றி. சிலர் வேண்டும் என்றே வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதை நம்ப வேண்டாம். வதந்திகளுக்கு நீங்களே முற்றுப்புள்ளி வையுங்கள். என்னை நம்பி வருபவர்களை கைவிட மாட்டேன்.

மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரப்படி நடப்பதுதான் என் வழி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை தகர்த்து எறிந்து மக்கள் பணியில் ஈடுபடுவேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்து தொண்டர்கள் ‘எப்போது போயஸ் கார்டன் செல்வீர்கள்’ என்று உரக்க குரல் எழுப்பினார்கள். அதற்கு தீபா பதில் அளிக்கையில் “நான் போயஸ் கார்டனுக்கு செல்வது உங்கள் கைகளில்தான் உள்ளது” என்றார்.

காலையிலேயே ஏராளமான வெளியூர் தொண்டர்கள் தீபாவின் வீட்டு முன் குவிந்தனர். அவர்கள் தீபாவின் படங்களை வைத்து இருந்தனர். அவரை சந்தித்து வாழ்த்து சொல்ல சால்வைகளும் வைத்திருந்தனர்.

மாலையில்தான் தீபா தொண்டர்கள் மத்தியில் பேசுவார். அவரது பேச்சை கேட்க தொண்டர்கள் அங்கேயே இருக்கிறார்கள். இதனால் அந்த பகுதி களைகட்டி உள்ளது. சிவஞானம் தெருவில் 10-க்கும் மேற்பட்ட நடைபாதை கடைகளில் தீபா படம் விற்கப்படுகிறது.