சிலபல குறைகள் இருந்தாலும் சூர்யா ரசிகர்களுக்கான சூர்யோதமாக அமைந்திருக்கிறது காப்பான் படம். பிரமதரின் காப்பாளன் ஆன சூர்யா விவசாயத்தின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்துபவர். ஆனால் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் தமிழ்நாட்டில் விவசாய கருப்பையான டெல்டா மாவட்டத்தை குறி வைக்கிறார். அதற்குப் பின்னால் ஒரு சர்வநாச சதியும் இருக்கிறது. அது சர்வதேச லெவலில் இருக்கிறது. இவற்றையெல்லாம் கண்டுபிடிக்கும் சூர்யா எவ்வாறு களை எடுக்கிறார் என்பது தான் காப்பானின் கதை.

சூர்யாவை இந்தப்படமாவது காப்பாற்றுமா என்பது அவரை விரும்பும் அனைவரின் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் கே.வி ஆனந்த் உழைத்திருக்கிறார். அந்த உழைப்பிற்கு கடுமையாக தோள் கொடுத்திருக்கிறார் சூர்யா. விவசாயி, ராணுவ அதிகாரி என அவர் ஏற்கும் ரோலுக்கு அவரே ரோல்மாடல் போல சிறப்பாக நடித்துள்ளார். மோகன்லால் நமது பிரதமரை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆர்யாவிற்கு விளையாட்டுப் பிள்ளை கதாபாத்திரம் தான். ஆனாலும் அதைச் சரியாகச் செய்துள்ளார். இடைவேளைக்குப் பிறகு அவரின் கேரக்டர் உயர்ந்து விடும்போதும் அவர் விளையாட்டாக நடித்து அசத்தி இருக்கிறார். சாயிஷா, சமுத்திரக்கனி, மற்றும் இருபெரும் வில்லன்கள் உள்பட படத்தின் நட்சத்திரங்கள் படத்தை உயர்த்தியே பிடித்துள்ளார்கள்.

பின்னணி இசையும் பாடல்களும் எப்போதும் கே.வி ஆனந்த் படங்களில் மட்டும் தனித்துத் தெரியும் படியாக செய்வார் ஹாரிஸ். இப்படத்தில் அது மிஸ்ஸிங். சண்டைக்காட்சிகளில் இருக்கும் அழுத்தம் முன்பாதி திரைக்கதையிலும் இருந்திருந்தால் பின்பாதி போலவே முன்பாதியும் நெருப்பை தெளித்திருக்கும். பின்பாதியில் நிஜமாகவே படம் பரபரவென பறக்கிறது. மேலும் சிலபல அரசியல் விமர்சனங்களும் படம் நெடுக இருக்கிறது. அதில் நேர்த்தியான விமர்சனங்களை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இது விவசாய பூமி, இங்கு விவசாயம் தான் சாமி என்பதை படம் தெளிவாகச் சொல்லியுள்ளது. அதற்காகவே நாம் காப்பானை கொண்டாட வேண்டும்