இரண்டு மணிநேரம் ஒரே முகத்தை மட்டும் திரையில் பார்த்துக்கொண்டே இருக்க முடியுமா? அந்தக் கேரக்டர் பேசிக்கொண்டே இருப்பதை சலிப்பில்லாமல் கேட்கமுடியுமா? இந்த கேள்விகளோடு தியேட்டருக்குள் செல்வோர்க்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி வைத்திருக்கிறார் இயக்குநர்/நடிகர் பார்த்திபன்.

ஒரு கொலைக்கைதியாக ஜெயிலில் இருக்கும் பார்த்திபன் போலீஸின் கேள்விகளுக்கு வாக்குமூலம் கொடுக்கிறார். அவர் கொடுக்கும் வாக்கு மூலங்கள் தான் கதை. அந்த வாக்குமூலங்களை போலீஸுன் வாக்கிடாக்கி துணையோடும், ஜன்னல் கம்பிகளின் துணையோடும், உஷா பேன் மூலமாகவும் சொல்கிறார். அவர் சொல்லும் கதைகளை எல்லாம் நாம் காட்சிகளாக கற்பனை செய்ய முடிகிறது. அதுதான் ஒத்த செருப்பின் கெத்தான சிறப்பு. நடிகராக பார்த்திபன் தொட்டிருப்பது பெரிய உயரத்தை. துயரத்தை முகத்தில் கொண்டு வருவதும், தனக்கே உரிய நய்யாண்டியில் கலக்குவதும், பாசத்தில் உருகுவதுமாய் ஒரு அசத்து அசத்தி இருக்கிறார். வசனகர்த்தா பார்த்திபன் வழக்கம் போல டபுள் மாஸ். “அம்மா அழகா இருக்கணும்னு அவசியம் இல்ல” என்ற வசனம் ஒரு சோறு பதம்.

C.சத்யா பின்னணி இசை ரசூல்பூக்குட்டியின் சவுண்ட் டிசைன் இரண்டும் உலகத்தரம். பார்த்திபன் சொல்லும் கதைக்குத் தேவையான உணர்வுகளை உளப்பூர்வமாக கொடுத்து உழைத்திருக்கிறார்கள் இருவரும். ஒளிப்பதிவாளரின் பணியும் அசுரத்தனமானது. ஒரே இடத்தை கண் இமைக்காமல் பார்க்க வைத்துள்ளார்.

கதையில் பேசப்படும் விசயங்கள் நிறைய தடவை தமிழ்சினிமாவில் பேசப்பட்டது தான். ஆனால் அதைத் தனியாளாக பார்த்திபன் பேசி ஜெயித்திருப்பது தான் நமது பெருமை. மார்தட்டி சொல்லலாம் தமிழ்சினிமாவில் ஓர் உலக சினிமா