“ஒரேப்போல சம்பவங்கள் இரண்டு குடும்பங்களுக்கு நடந்தால் அதற்கு மூலக்காரணம் என எதாவது ஒன்று இருக்கும்” என்ற வித்தியாச லைனைப் பிடித்து அசுரப்பாய்ச்சல் காட்டி இருக்கிறது ஜீவி.

நாயகன் வெற்றி தன் ஊரில் வெட்டியாகச் சுற்றித் திரிய, குடும்பத்தினர் காண்டு ஆகிறார்கள். அதனால் சென்னைக்கு இடம்பெயர்கிறார். கருணாகரனோடு டீக்கடையில் வேலை செய்யும் அவர் ரோகிணியின் அப்பார்ட்மெண்டில் தங்குகிறார். ரோகிணி பார்வையற்ற தன் மகளுக்காக சேர்த்து வைத்திருக்கும் நகையை தெரியாமல் ஆட்டையைப் போடுகிறார். திருடியதற்கான எந்த எவடென்ஸையும் யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி தன் புத்திசாலித்தனத்தால் செயலாற்றுகிறார் ஹீரோ. அதன்பின் தான் அவருக்கு ரோகிணி குடும்பத்திற்கும் தன் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பியல் தெரிகிறது. அதற்கான வேர் தேடி அவர் புறப்பட அதன்பிறகான காட்சிகள் எல்லான் செம்ம ஷார்ப் திரில்லர்.

எட்டுத் தோட்டாக்களில் நடிப்பு மூலம் பட்டா போட முடியாத ஹீரோ வெற்றி இப்படத்தில் பக்காவாக நடித்திருக்கிறார். அதற்கான வாய்ப்பை இயக்குநர் கோபிநாத் சிறப்பாக வழங்கி இருக்கிறார். கூடவே வரும் கருணாகரன் மிக தேர்ந்த நடிப்பை கொடுத்திருக்கிறார். மைம் கோபி, ரோகிணி, மோனிகாசி சின்னகோட்ளா, அஷ்வினி சந்திரசேகர், ஆகியோர் பங்களிப்பும் படத்தில் முக்கியமானவை.

படத்தின் ஆகப்பெரும் பலம் படம் எந்த இடத்திலும் தேங்கி நிற்கவே இல்லை. அதேபோல் மிகச் சிக்கலான கதைக்கருவை எந்தக் குழப்பமும் இல்லாமல் திரையில் பரிமாறி இருக்கிறார்கள் ரைட்டர் பாபுதமிழும், இயக்குநர் கோபிநாத்தும். மேலும் சில கண்டினியூட்டி பிரச்சனையும் லாஜிக் மீறல்களும் சின்ன உறுத்தலாக இருந்தாலும் படத்தின் சுவாரஸ்ய கதை சொல்லல் உந்துதலாக இருக்கிறது. சுந்தர மூர்த்தியின் பின்னணி இசை சரியான கோர்வை. பிரவின்குமார் ஒளிப்பதிவிலும் அட்சர நேர்த்தி.

கதாநாயகன் கேரக்டர் புரிந்துகொள்ள முடியாத வடிவத்திலே படத்தின் முடிவை வரையிலும் இருப்பது ஏனோ? சின்னச் சின்ன கவனப்பிழைகள் படத்தில் இருந்தாலும் படத்தின் முடிவு அசத்தல். டிக்கெட் எடுத்து தியேட்டர் உள்ளே செல்லும் ரசிகனை நிச்சயம் திருப்தி படுத்தும் இந்த ஜீவி!