ஆரியன் — திரை விமர்சனம்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அவ்வளவு எளிதில் செய்தியாளர்களிடம் சிக்காத பிரபல நடிகரின் நேர்காணல் நடக்கிறது. அப்போது பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து அந்த நடிகரை சகட்டுமேனிக்கு திட்டியவாறு துப்பாக்கியால் அவரது காலில் சுடுகிறார். அதே வேகத்தில் பார்வையாளர்களாக வந்த அனைவரையும் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக்கி அதிர்ச்சியளிக்கிறார்
காவல்துறை
அவரது டிமாண்ட் என்ன என்று கேட்க, அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதோடு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரையும் விடுகிறார்.
பொதுமக்கள் கண் முன்னே இறந்தவர் எப்படி இந்த கொலைகளை செய்வார்? அந்த ஐவர் யார்? ஐவரும் கொல்லப்பட்டனரா என்ற கேள்விக்கு விடையே ஆரியன்.
தொடர் கொலைகளை தடுத்து நிறுத்த நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரியாக விஷ்ணு விஷால் வருகிறார்.
கொலையாளி கொல்வதாக அறிவித்த நபர்களை காப்பாற்ற படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு தோல்விக்கும் அவமானம் சுமக்கும் இடங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவரது
காதல் மனைவியாக வரும் மானசா, வரும் நேரங்கள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பை தந்து விடுகிறார். கொலைகளை தடுப்பதற்கான முயற்சியில், அவர் சேகரிக்கும் தகவல்கள், அதனை வைத்து நடத்தும் விசாரணை என்று படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் செல்வ ராகவன், சைக்கோ கொலையாளியாக கவருகிறார். அலட்டல் இல்லாத அவரது நடிப்பு, இயல்பான உடல் மொழி ஆகியவை அவரது கேரக்டரை உயர்த்திப் பிடி க்கிறது. தொலைக்காட்சி நிருபராக ஷ்ரத்தா ஸ்ரீநாத் கேரக்டரில் அழுத்தமான முத்திரை பதிக்கிறார்.
கருணாகரன், அவினாஷ் ஆகியோரும் இருக்கிறார்கள். நடிக்க தெரிந்த கருணாகரனை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம்.
ஜிப்ரான் இசையில் பின்னணி இசை கதை ஓட்டத்தை அதன் வேகம் குறையாமல் நமக்குள் கடத்தி விடுகிறது.
தொடர் கொலைகளை ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் கேமரா கோணங்கள் ஒருவித திகிலுடன் காட்சிகளாய் கண் முன் நிறுத்துகிறது.
எழுதி இயக்கியிருக்கும் பிரவீன்.கே, இதுவரை சொல்லப்படாத புதிய கோணத்தில் சைக்கோ திரில்லர் கதையை கையாண்டிருக்கிறார் நம்பும்படி அதற்கான காட்சிகளை லாஜிக்கோடு வடிவமைத்திருப்பது படத்திற்கு பலமாகி விடுகிறது. கொலைகளையும் அறிவியல் பூர்வமாக நிகழ்த்துவதோடு, அதை திரைமொழியில் சொன்ன விதத்திலும் வெற்றிக் கோட்டை தொட்டு விடுகிறார்.
