திரை விமர்சனம்

மெஸஞ்ஜர் –திரை விமர்சனம்

காதலித்த பெண் மனிஷா ஜஸ்னானி ஏமாற்றியதால் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முடிவுக்கு வருகிறார். அதற்காக தூக்கில் தொங்க முயலும் நேரத்தில் அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசேஜ் வருகிறது.தற்கொலை முடிவை தள்ளி வைத்து விட்டு மெசேஜை பார்க்கிறார். அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருக்கிறார்கள்” என்ற செய்தி இருக்கிறது.
இதில் அதிர்ச்சி என்னவென்றால், அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார் என்பது தான்.
இறந்தவர் எப்படி மெசெஜ் அனுப்ப முடியும்? அவர் உண்மையில் இறந்து விட்டாரா ? என்பதை விசாரிக்கும் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு அவர் இறந்தது உண்மை தான் என்பது தெரிய வருவதோடு, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் தெரிய வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது ? என்பதை, ஆவி பறக்க சொல்லி இருக்கிறார்கள்.
நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் தனது
கேரக்டரை உணர்ந்து செய்திருக்கிறார். குறிப்பாக தனக்கே தெரியாமல் தன்னை நேசித்த ஒரு பெண் இறந்து விட்ட நிலையில் அவள் கனவுகளுக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளும் இடங்கள் அத்தனையிலும் சூப்பரான பர்பாமென்சில் அசத்தி விடுகிறார்.
காதலித்து கழற்றிவிடும் கேரக்டரில் வரும்
மனிஷா ஜஸ்னானி , தனது கேரக்டரில் ஸ்டெடியாக இருக்கிறார். முன்னாள் காதலனுக்கு ஒரு பிரச்சனை என்றதும் நட்பு ரீதியாக உதவும் இடங்களில் இயல்பான நடிப்பை தந்து இருக்கிறார். லிப் லாக் காட்சி ஒன்றில் நடித்து இன்ப அதிர்ச்சியும் தருகிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமாவிடம் கிராமத்து பெண்ணுக்கே உரிய வசீகரம். காதல் என்று வந்த பிறகு இவர் நடிப்பு தனி ரகம்.

பாத்திமாவின் தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன், தோழிக்காக எதையும் செய்ய முன்வரும் கேரக்டரில் நடிப்பு முத்திரை பதிக்கிறார்.
ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வை நடிப்பில் கொண்டு வந்து விடுகிறார்கள்.
இசையமைப்பாளர் அபுபக்கர்.எம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன.
ஒளிப்பதிவாளர் பால கணேசனின் கேமரா எளிமையான கிராமத்து லொக்கேஷன்களை அழகுற கண் முன் நிறுத்துகிறது. இதுவரை
திரையில் சொல்லப்படாத ஒரு கதையை, அன்புள்ள ஆவி பின்னணியில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் இலங்கமணி. குறிப்பாக அந்த கிளைமாக்ஸ், நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.
பார்த்த காதல்,
பார்க்காத காதல், ஒருவர் பார்த்து மற்றொருவர் பார்க்காத காதல், ஏற்றத்தாழ்வு காதல் என்று தமிழ் சினிமாவில் பல காதல் கதைகள் வந்த போதிலும், ஆன்மாவை நேசிக்கும் ஒரு அதிசய காதலாக, உண்மை நேசத்துக்கு உயிர் கொடுத்திருக்கும் திரைக்கதை படத்தின் ஆகப்பெரும் பலம்.