திரை விமர்சனம்

லவ் மேரேஜ் – திரை விமர்சனம்

30 தாண்டிய இளைஞர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் பெண் கிடைப்பதில்லை. ஒரு வழியாக கிடைத்த பெண்ணும் கிடைக்காது போனால்… மதுரையை சேர்ந்த விக்ரம் பிரபுவுக்கு 33 வயதாகியும் திருமணமாகவில்லை. 25 வயது காலகட்டத்தில் தேடிவந்த மண வாய்ப்புகளில் அலட்சியம் காட்டியதன் விளைவு, இப்போது 33 வயதை எட்டிய நிலையில் பெண் பார்க்கப் போகும் இடங்களில் வயதை காரணம் காட்டி புறக்கணிக்கப்படுகிறார். ஒரு வழியாக புரோக்கர் மூலம் பெண் பார்க்க கோவைக்கு குடும்பத்துடன் செல்கிறார்கள்.பெண் பிடித்துப் போக, பெண் வீட்டாருக்கும் சம்மதம். இதனால் தாமதிக்காமல் திருமண நிச்சயதார்த்தம்.

மறுநாள் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்துக்கு தேதி குறித்து ஊருக்கு கிளம்ப தயாரான நிலையில் கொரோனாவுக்காக ஊரடங்கு சட்டம் அமுல் ஆகிறது. இதனால் பயணத்துக்கு வாய்ப்பு இன்றி மாப்பிள்ளை குடும்பம் அங்கேயே தங்க வேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் மணப்பெண் சுஷ்மிதாவுடன் பேசிப் பழக விக்ரம் பிரபு முயற்சிக்க, ஆனால், அவர் முகம் பார்த்து கூட பேசாமல் மணப்பெண் தவிர்ப்பதோடு, திடீரென்று ஒரு நாள், வீட்டை விட்டும் எஸ்கேப் ஆகிறாள். அப்போதுதான் ஏற்கனவே அந்தப் பெண் ஒரு இளைஞனை காதலித்த தகவல் மாப்பிள்ளை குடும்பத்துக்கு தெரிய வர…
அதன் பிறகு என்ன நடந்தது?, விக்ரம் பிரபுவுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறது கதை.

பெண் கிடைக்காத மாப்பிள்ளையாக,
இதுவரை ஏற்றிராத கேரக்டரில் விக்ரம் பிரபு. பெண் கிடைத்ததும் அவளுக்கு தன் மீதான விருப்பம் அறிய முயன்று கன்னத்தில் அறை வாங்கும் இடத்தில் அவர் நடிப்பை பார்க்க வேண்டுமே… திருமணம் ஆகாத சோகத்துடன் வலம் வரும் நேரங்களில் அதை முகத்தில் காட்டாமல் சமாளிக்கும் இடங்களில் நடிப்பில் இன்னொரு முகம் காட்டுகிறார். நாயகியாக நடித்திருக்கும் சுஷ்மிதா பட் அமைதியான முக பாவத்தில் ஆழமான நடிப்பை தந்திருக்கிறார்.

காதலனை மனதில் சுமந்து கொண்டு இன்னொரு இளைஞரோடு நிச்சயதார்த்தம் என்கிற வலியை நடிப்பில் அழகாக கொண்டு வருகிறார். நாயகியின் தங்கையாக வரும் மீனாட்சி தினேஷ், அக்காவுக்கும் சேர்த்து பேசுகிறார். விக்ரம் பிரபு உடனான அவரது அணுகுமுறை கதையின் பிற்பகுதி கதைக்கும் அஸ்திவாரம் ஆகிவிடுகிறது. எம்எல்ஏவாக சிறப்பு தோற்றத்தில் சத்யராஜ். வரும் ஐந்து நிமிடத்திலும் சிரிப்பு தோற்றம் காட்டிவிட்டு போய்விடுகிறார் நாயகனின் நண்பனாக புகைப்பட கலைஞராக ரமேஷ் திலக், நாயகனின் அப்பாவாக கஜராஜ், வில்லங்க உறவினராக அருள்தாஸ் அளவான நடிப்பில் காட்சிகளில் நிறைந்து நிற்கிறார்கள்.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையின் தாங்கு தூண்கள். எழுதி இயக்கியிருக்கும் சண்முகப் பிரியன் ஒரு மாப்பிள்ளையி ன் பெண் தேடும் படலத்தை கலகலப்பான குடும்ப பின்னணியில் இயக்கியிருக்கிறார். ஓடிப்போன பெண் வீட்டுக்கே திரும்பி வரும் இடத்தில் எதிர்பாராத அந்த ட்விஸ்ட் கை கொடுக்கிறது. எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று மணப்பெண்ணின் தங்கை நாயகனுக்கு சொல்லும் இடம் கல்யாண மாப்பிள்ளைகளுக்கான அறிவுரையாவும் ஆகிவிடுகிறது.
‘லவ் மேரேஜ்’ கம கம  காதல் வாசனை.