மணல் கயிறு 2

முதல் பாகத்தில் திருமண புரோக்கராக வரும் விசுவிடம் எட்டு கண்டிஷன்கள் போட்டு, அவர் பார்த்து வைக்கும் சாந்தி கிருஷ்ணாவை திருமணம் செய்து கொள்கிறார் எஸ்.வி.சேகர். அதன்பிறகு, தனது எட்டு கண்டிஷன்களுக்கும் அவள் சற்றும் பொருத்தமானவள் இல்லை என்று தெரிந்ததும், வேறு வழியில்லாமல் அவளுடனேயே 34 வருடங்கள் வாழ்ந்து விடுகிறார்.
35 வருடங்களுக்கு பிறகு மணல் கயிறு 2-ம் பாகத்தில் எஸ்.வி.சேகருக்கு திருமண வயதில் பெண் இருக்கிறாள். அவள்தான் பூர்ணா. திருமணத்தில் பூர்ணாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. எந்நேரமும் பிசினஸிலேயே பிசியாக இருக்கிறாள். இந்நிலையில், பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்ய சம்மதிக்கும் பூர்ணா, தனது அப்பா போலவே தனக்கு வரும் மாப்பிள்ளை தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் ஒத்துப்போனவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள்.
தனக்கு பெண் பார்த்த விசுவையே தனது பெண்ணுக்கும் மாப்பிள்ளை தேட அழைக்கிறார் எஸ்.வி.சேகர். அவர் பூர்ணாவின் எட்டு கண்டிஷன்களுக்கும் பொருத்தமானவர் அஸ்வின் சேகர்தான் என்று கூற இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு, அஸ்வின் சேகர் தன்னுடைய 8 கண்டிஷன்களுக்கும் எதிரானவர் என்பது பூர்ணாவுக்கு தெரிய வருகிறது.
இதன்பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
முதல்பாகத்தில் வந்த எஸ்.வி.சேகர், விசு, குரியகோஸ் ஆகியோர் அதே கதாபாத்திரங்களை இந்த பாகத்திலும் ஏற்று நடித்திருக்கிறார்கள். தங்களது அனுபவம் மிகுந்த நடிப்பை இதிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாகத்தில் நடித்த சாந்தி கிருஷ்ணா வேடத்தில் ஜெயஸ்ரீ கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
நாயகன் அஸ்வின் சேகர் ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட் என எல்லா ஏரியாவிலும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். பூர்ணாவுக்கு இப்படத்தில் பலமான கதாபாத்திரம். அவருடைய நடிப்பை பிரதிபலிக்கக்கூடிய கதாபாத்திரம் என்பதால் அவரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார்.
ஜோசியராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், அரசியல்வாதியாக வரும் நமோ நாராயணன், விளம்பர படம் இயக்குபவராக வரும் ஜெகன், அவரது உதவியாளராக வரும் ஜார்ஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாரதர் நாயுடுவின் உதவியாளராக வரும் சுவாமிநாதன், விசுவுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.
முதல் பாதியில் எப்படி காமெடி, செண்டிமெண்ட், சமூக கருத்துக்கள் இருந்ததோ, அதையே இரண்டாம் பாகத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மதன்குமார். படத்தின் முதல் பாதி நாடகத்தன்மையுடன் இருந்தாலும் கலகலப்புடன் நகர்வதால் படம் பெரிதாக போரடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் பூர்ணாவின் திருமணம், அதன்பிறகு நடக்கும் பிரச்சினைகள், செண்டிமெண்ட் என கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. இருப்பினும், பாசிட்டிவான கிளைமாக்ஸ் ரசிகர்களை திருப்தியடைய வைக்கிறது.
எஸ்.வி.சேகரின் திரைக்கதையோடு மதன்குமாரின் இயக்கமும் இணைந்து பயணித்திருப்பது படத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறது.
தரணின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, அனிருத் பாடியுள்ள ‘அடியே தாங்கமாட்டே’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான். ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மணல் கயிறு 2’ அவிழ்க்க முடியாத காமெடி முடிச்சு