திரை விமர்சனம்

மர்மர் -திரை விமர்சனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைப் பகுதி தான் இந்த கதையின் நாயகன்.
அங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் ஏழு கன்னி தெய்வங்கள் இருப்பதாகவும், அவர்கள் பெளணர்மி தினத்தில் அங்கிருக்கும் குளத்தில் நீராட வருவதாகவும், அந்த கன்னி தெய்வங்களுக்கு ஆண்டுதோறும் செய்ய வேண்டிய பூஜையை செய்ய விடாமல், அங்கிருக்கும் சூனியக்காரியின் ஆவி தடுப்பதாகவும்அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். அந்த சூனியக்காரி காட்டில் ஆவியாக அலைவதால், அந்த காட்டுக்குள் சென்ற யாரும் இதுவரை திரும்பி வந்ததில்லை என்பதும் கிராம மக்கள் திகிலுடன் தரும் செய்தியாக இருக்க…இதை கட்டுக்கதை என்று நம்பும் கூட்டமும் இருக்கும் அல்லவா.அந்தப்படியே இது வெறும் கட்டுக்கதை என்பதை நிரூபிக்க அந்த காட்டுக்குள் சென்று ஆவணப்படம் எடுக்க முடிவு செய்கிறது இரண்டு ஆண் இரண்டு பெண் அடங்கிய ஒரு இளைஞர் கூட்டம். இதற்காக அந்த காட்டுப் பகுதியில் உள்ள கிராமத்து இளம்பெண் ஒருவரையும் சேர்த்துக்கொண்டு ஐவராக காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கு ஆவணப்படம் எடுத்தார்களா? ஆவிகள் நடமாட்டத்தை உணர்ந்தார்களா?

ஊர் மக்கள் சொன்னது போல் அங்கு சூனியக்காரியின் அமானுஷ்யம் இருந்ததா? இதற்கெல்லாம் மேலாக அவர்கள் உயிருடன் ஊர் திரும்பினார்களா என்பதை திகிலுக்கும் திடுக்கிடலுக்கும் பஞ்சமில்லாமல் அரங்கின் ஏசி குளிரிலும் வியர்க்க வைக்கும் பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் என நடித்தவர்கள் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து முடிந்தவரை நம்மை பயமுறுத்து கிறார்கள்.இந்த கூட்டணியில் அந்த கிராமத்து பெண் நடிப்பில் தனி ரகம். கேமரா மேனாக வருபவர் அந்த அமானுஷ்ய ராத்திரியிலும் கிச்சு கிச்சு காட்டி சிரிக்க வைக்கிறார்.நேரம் காலம் இல்லாமல் இஷ்டத்துக்கு தண்ணி அடிப்பதும் புகைஊதுவதுமாக அந்த பயணக் குழுவின் ஆரம்ப அலம்பல்கள் அத்தனையும் ஆவி ஆதிக்கம் தொடங்கியதில் இருந்து விடைபெற்று அப்புறமாய் மீதி காட்சியில் அனைத்திலும்
பீதியுடனே வருகிறார்கள்.
நள்ளிரவில் ஆவி ஆதிக்கம் தொடங்கியது தெரியாமல் ஒரு சிகரெட்டுக்காக உயிரை விடும் சுகன்யா சண்முகம் ஜீவனுள்ள நடிப்பில் தனித்து தெரிகிறார்.டென்ட்டுக்குள் தனித்து மாட்டிக் கொள்ளும் நாயகனை ஆவி பயமுறுத்தும் இடம் திகிலின் உச்சம்.அந்த திகில்நேரங்களிலும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் பயண குழுவின் கேமரா மேனாக வரும் தேவ்ராஜ்.

ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், குறைந்த வெளிச்சத்தில் நள்ளிரவு காட்சிகளை படமாக்கி அவர் பங்குக்கும் முடிந்தவரை திகில் தருகிறார். படத்தில் இசை அமைப்பாளர் இல்லாத குறையை ஒலி வடிவமைப்பாளர் கேவ்ய்ன் பிரெடெரிக் தனது மிரட்டல் ஒலி களால் மறக்க வைக்கிறார்.வழக்கமான திகில் படங்கள் போல் அல்லாமல் படம் வித்தியாசமாக அமைந்திருப்பதற்கு அமானுஷ்ய காட்சிகளில் இவர் தந்திருக்கும் ஒலியும் முக்கிய காரணம்.

எழுதி இயக்கி இருக்கிறார் ஹேம்நாத் நாராயணன். கதை காட்டுக்குள் போனதுமே திகிலை இதயத்துக்கு நெருக்கமாக கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆவிகளை காட்ட ரொம்ப நேரம் எடுத்துக் கொள்வது மட்டும் ‘அட சீக்கிரம் காட்டுங்கப்பா ‘என்று சொல்லத் தோன்றுகிறது. காட்டுக்குள்ளே திகில் விழா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *