திரை விமர்சனம்

பிரதர் – திரை விமர்சனம்

எளிதான தலைப்பில் வந்திருக்கும் அக்கா தம்பி பாசக் கதை.
எதற்கெடுத்தாலும் சட்டம் பேசும் சட்டக்கல்லூரி மாணவர் ஜெயம் ரவி. அவரது பாசமிகு அக்கா பூமிகா.
அக்கா திருமணமாகி கணவர் இரண்டு குழந்தைகள் என்று செட்டிலாகி விட…
தம்பி ஜெயம் ரவியோ அனுதினமும் தனது லா பாயிண்ட்டில் பெற்றோருக்கு தலைவலி தர, ஒரு கட்டத்தில் அப்பாவுக்கு அதுவே நெஞ்சு வலியில் முடிய, பதறிப் போய் ஊட்டியில் இருந்து ஓடிவரும் அக்கா, தம்பியை தன்னுடன் ஊட்டிக்கு அழைத்துப் போகிறார். அங்கே ஒரு ஆறு மாத காலம் தங்க வைத்து தம்பியை திருத்தி அனுப்பி வைப்பதாக அப்பாவுக்கு வாக்கு கொடுக்கிறார்.
ஆனால் போன இடத்தில் ஜெயம் ரவியின் லா பாயிண்ட் இன்னும் பிரச்சனையாகிறது.
எதற்கும் எல்லாவற்றுக்கும் டைம் டேபிள் போட்டு வாழும் அந்த குடும்பத்தில் இருந்து அக்கா குடும்பம் பிரிய தம்பியே காரணமாகிறார்.
தன்னால் பிரிந்த அக்கா குடும்பத்தை ஒன்று சேர்க்க தம்பி எடுக்கும் அடுத்த கட்ட அதிரடி பிளஸ் சாமர்த்திய நடவடிக்கைகளே மீதிக் கதை.
எதற்கெடுத்தாலும் சட்டம் பேசியே வம்பை வாரி அணைக்கும் கேரக்டர் ஜெயம் ரவிக்கு. தன்னால் அக்கா குடும்பத்தில் பிளவு ஏற்பட்ட பின்பு அவரது நடிப்பில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் கதைக்கான ஜீவன் ஆகி விடுகிறது.
பாசமிகு அந்த அக்கா கேரக்டரில் பூமிகா முழுமையாக பொருந்திப் போகிறார். கணவர் குடும்பத்தில் எதற்காகவும் தனது தம்பியை விட்டுக் கொடுக்காத அந்த அக்கா பாசம், அக்கா இல்லாத நிறைய தம்பிகளை ஏங்க வைக்கும் என்பது நிச்சயம்.
ஜெயம் ரவியின் காதலியாக பிரியங்கா மோகன் வனப்பில்
கூடியும் நடிப்பில் குறைந்தும் தெரிகிறார்.
பூமிகாவின்பெற்றோராக அச்யுத் குமார்-சீதா, கணவராக நட்டி, மாமனார் மாமியாராக ராவ் மோகன் -சரண்யா கொடுத்த கேரக்டர்களில் நிலைத்தாலும், நடிப்பில் ராவ் மோகன் முன் நிற்கிறார்.
காமெடிக்கு வி.டி.வி. கணேஷ்.
ஹரிஷ் ஜெயராஜ் இசையில் மக்கா மிஷி பாட்டில் ரசிகர்கள் குஷி.
ஊட்டியின் குளுமையை இதயம் வரை கொண்டு வந்து நிறைக்கிறது விவேகானந்தரின் கேமரா.
குடும்ப பாச பின்னணியில் ஒரு கதையை உருவாக்க நினைத்த இயக்குனர் ராஜேஷ். எம். கதையை தனது வழக்கமான
பாணியில் காமெடியாக கொண்டு செல்வதா? அல்லது அதிரடியாக கொண்டு செல்வதா?
என்று குழம்பிஇருப்பது தெரிகிறது. அந்த திடீர் கிளைமாக்ஸ் வில்லன் யார் என்று தெரிய வரும்போது நிஜமாகவே இது காமெடி படம் தான் என்பது ஊர்ஜிதம் ஆகி விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *