புஜ்ஜி அட் அனுப்பட்டி பட விமர்சனம்..

திரை விமர்சனம்

ஆட்டை தேடும் அப்பாவி சிறுமி

பள்ளியின் கோடை விடுமுறை முடியும் இந்த தருவாயில் குழந்தைகளுக்கான படமாக வந்திருக்கிறது ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.

சரவணன் & துர்கா இருவரும் அண்ணன் தங்கைகள்..இவர்கள் ஒரு நாள் பள்ளி விட்டு வீட்டிற்கு வரும்போது பிறந்த 20 நாட்களே ஆன ஒரு ஆட்டுக்குட்டியை வழியில் பார்க்கின்றனர். ஒரு முட்புதற்குள் சிக்கிக் கிடக்கும் அந்த ஆட்டுக்குட்டியை எடுத்து வந்து வளர்க்கின்றனர்..

ஆட்டின் உரிமையாளர் வந்து கேட்கும் வரை வளர்க்கலாம் என்ற பெற்றோர் சொல்ல அதற்கு புஜ்ஜி என பெயர் வைத்து பாசமாக வளர்த்து வருகிறார் சிறுமி துர்கா.

சில தினங்களில் அதன் உரிமையாளர் வந்து ஆட்டுக்குட்டி எடுத்துச் செல்லவே அழுகிறாள் சிறுமி.. இதனை அறியும் தோட்டது முதலாளி கமல்குமார் அந்த ஆட்டை விலை கொடுத்து வாங்கி சிறுமியிடம் ஒப்படைக்கிறார்.

துர்காவின் தந்தையோ ஒரு குடிகாரர்.. ஒரு நாள் அவர் குடிக்க பணம் இல்லாத போது ஆட்டுக்குட்டியை அருகில் உள்ள அனுப்பட்டி என்ற கிராமத்தில் விற்றுவிட்டு வந்து குடித்து உறங்கி விடுகிறார்.

இதனால் ஆட்டுக்குட்டியை தேடி அனுப்பட்டி கிராமத்திற்கு சரவணன் துர்காவும் செல்கின்றனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது? குழந்தைகள் என்ன செய்தனர்? புஜ்ஜி என்ற ஆட்டுக்குட்டி கிடைத்ததா?

கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்..

குழந்தைகளாக நடித்துள்ள இருவருமே நடிப்பில் பாஸ் மார்க் பெறுகின்றனர்.. அதிலும் சிறுமி துர்காவாக நடித்துள்ள பிரணிதி முதல் மார்க் பெறுகிறாள்.. ஒரு ஆட்டுக்குட்டிக்காக அவள் காட்டும் அன்பு பாசம் அழ வைக்கிறது.. நெகிழ வைக்கிறது.. ஆட்டுக்குட்டி கிடைத்து விடாதா என நம்மையும் ஏங்க வைக்கிறது.

நல்ல உள்ளம் கொண்ட முதலாளியாக கமல்குமார்.. தன் தொழிலாளியின் குழந்தைகள் ஆடக்கூடாது என பார்த்து பார்த்து செய்யும் முதலாளியாக ஜொலிக்கிறார். கமலுக்கும் போலீஸ் வைத்தீஸ்வரிக்கும் காதல் காட்சிகள் வைத்திருந்தால் இளசுகளையும் கவர்ந்திருக்கலாம்..

சரவணன் துர்காவுடன் இணையும் மற்றொரு பெண்ணும் நம்மை அதிகமாகவே கவர்ந்து விடுகிறார். தனக்கே வாழவும் தங்கவும் வசதி இல்லாத போது குழந்தைகளுக்காக அவர் செய்வது நல்ல உள்ளத்தை காட்டுகிறது.

கறிக்கடை பாய் முதல் பெட்ரோல் பங்க் பையன் வரை அனைவரும் முதல் படம் போல இல்லாமல் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கின்றனர்..

ஆனால் ஆட்டை கறிக்கடை பாயிடம் இருந்து காப்பாற்ற மூன்று மணி நேரங்களில் ரூபாய் 3000 பணத்தை திரட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர் கற்பனை தான்.. அதிலும் ஹாஸ்பிடலில் ஒருவர் இவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுப்பது நம்பும்படியாக இல்லை..

ராம் கந்தசாமி என்பவர் எழுதி இயக்கி தனது கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார்.

கார்த்திக் ராஜா இசையமைக்க கு.கார்த்திக் பாடல்களை எழுத படத்தை 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் அருமை கு கார்த்திக் பாடல்கள் எழுதி இருக்கிறார்.. அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சரவணன் மாதேஸ்வரன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

குழந்தைகளுக்கான படத்தில் பெரிய லாஜிக் எல்லாம் பார்க்காமல் குழந்தைகளோடு நாமும் இந்த படத்தை ரசித்தால் நிச்சயம் ரசிக்கலாம்.. ராம் கந்தசாமி என்பவர் குழந்தைகளை மையப்படுத்தி இந்த கதையை இயக்கியிருக்கிறார்.

அதிலும் ஒரு ஆட்டை தேடி அலையும் ஒரு பாசமுள்ள சிறுவர்களை காட்டி கிராமத்து அப்பாவின் மனிதர்களை கண்முன்நிறுத்தி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *