Latest:
திரை விமர்சனம்

கூழாங்கல் விமர்சனம் 3.5/5

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான படம் ‘கூழாங்கல்’.

94வது ஆஸ்கர் விருதுக்கான இந்திய அரசின் அதிகாரபூர்வ பரிந்துரைப்பட்ட படம் ‘கூழாங்கல்’. மேலும் பல விருதுகளை வென்ற இந்த படம் சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் ஆனது.

குடிதண்ணீருக்கே வழி இல்லாத வறண்ட பூமி (கிராமத்தில்) வாழ்கிறார் கருத்தடையான் (கணபதி). இவருக்கு ஒரு மகன்.

குடிகாரக் கருத்தடையானிடம் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்று விடுகிறார் இவரது மனைவி. எனவே தன் மகனை அழைத்துக் கொண்டு மனைவியை கூட்டிவர செல்கிறார் கருத்தடையான். இவர்கள் செல்லும் பயணமே இந்த படம் ‘கூழாங்கல்’.

ஒரு வறண்ட கிராமத்தில் குடிகாரத் தந்தை பொறுப்பான மகன் ( வேலு எனும் செல்லப்பாண்டி சிறுவன்). இவர்கள் இருவரின் வழியே இந்த திரைக்கதை பயணிக்கிறது.

குடிக்காரன்.. கருத்த தேகம்.. கலைந்த முடி.. பீடிபிடிக்கும் குணம்.. இப்படி யதார்த்த கிராமத்து மனிதனாகவே வாழ்ந்திருக்கிறார் நாயகன் கணபதி. ஆணாதிக்கம்.. குடும்ப வன்முறை என கிராமத்து நிகழ்வையும் உரித்துக் காட்டி இருக்கிறார் இயக்குனர் வினோத் ராஜ்.

நடந்து நடந்து வெறுத்துப் போய் இறுதிக் காட்சியில், தண்ணீர் தாகம் எடுக்காமல் இருக்க, பயணத்தின் நடுவே வேலு ஒரு கூழாங்கல்லை வாயில் போட்டு நடந்து வருகிறான். அதன் பின்னர் அந்தக் கூழாங்கல்லை வைத்து காட்சிகளை நகர்த்தி இருப்பது இயக்குனரின் கலைவண்ணம்.

கணபதிக்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார் வேலு. இந்த சிறுவன் செய்யும் சேட்டைகளும் அவனின் பொறுப்பான குணமும் வேலு வெளுத்து கட்டி இருக்கிறான் என சொல்ல வைக்கிறது.

குடிதண்ணீருக்கு அவதிப்படும் வறண்ட கிராமம் புழுதி படர்ந்த பகுதிகள் என அனைத்தையும் நேர்த்தியாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர்கள் விக்னேஷ் மற்றும் ஜெயா பார்த்திபன்.

கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு படத்திற்குக் கூடுதல் பலம்.

நம் அன்றாட பார்க்கும் பாடல்.. காதல்.. வன்முறை என எந்த கலப்படமும் இல்லாத ஒரு படைப்பை கொடுக்க முன் வந்திருக்கும் இயக்குனரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சிறப்பு சேர்த்திருக்கிறது. நீர் ஊற்றின் சத்தம் கூட ரசிக்க வைக்கிறது.

சுவரே இல்லாத பள்ளி.. பெட்டிக்கடை, குடிசை வீடுகள் என யதார்த்தத்தை படம் முழுக்க காணமுடிகிறது.

நிஜன் – சிஞ்சுவின் கலை படைப்புக்கு ஆயிரம் பாராட்டுக்கள்..

குடிக்கார ஆணாதிக்கம், குடும்ப சண்டை என ஊறிக்கிடக்கிற அழுக்கான ஒரு பிரிவினர் மீது கூழாங்கல்லை வீசி வித்தியாசமான படைப்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் நயன்தாரா & விக்னேஷ் சிவன் தம்பதியினர்.

இவர்கள் மூலம் இந்த படைப்பு உலக அரங்கிற்குள் சென்றுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.