மார்கழி திங்கள் விமர்சனம் 3/5

என் இனிய தமிழ் மக்களே… என்று தன் பேச்சை தொடங்கும் பாரதிராஜா இந்த படத்தில் என் மகனை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறேன் உங்களின் ஆதரவு தேவை என பேச்சுடன் இந்த படம் தொடங்குகிறது..
இயக்குனர் சுசீந்திரன் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
நாயகி கவிதா.. நாயகன் வினோத்..் இருவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர இந்த விஷயம் கவிதாவின் தாத்தா பாரதிராஜாவுக்கு தெரிய வருகிறது.
கல்லூரிப் படிப்பையும் முடியுங்கள். பிறகு தான் கல்யாணம். அதுவரை நீங்கள் இருவரும் பார்க்கக் கூடாது என நிபந்தனை போடுகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது.? தாத்தா சொன்னபடியே தன் வாக்கை காப்பாற்றினாரா.? காதலர்கள் இணைந்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.
கவிதாவாக ரக்ஷினி… வினோத்தாக நடிக்கும் ஷ்யாம் செல்வன்.. காதல் காட்சிகளில் இருவரும் கிராமத்து இளசுகளை பிரதிபலிக்கின்றனர். காதலை எதிர்ப்பவர்களுக்கு கவிதா ஒரு சொர்ணாக்காவாக மாறி இருப்பதும் சிறப்பு.
இருவரும் காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளார். நாயகியின் தாய்மாமனாக இயக்குநர் சுசீந்திரன்.
வயதுக்கு ஏற்ற கேரக்டரை பாரதிராஜா தேர்ந்து எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதிராஜாவின் கேரக்டர் கொஞ்சம் கலகலப்பாக காணப்படும். ஆனால் இதில் கொஞ்சம் சோர்வாக காணப்படுவது வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவர்களுடன் அப்புகுட்டி & ஜார்ஜ் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதிராஜா உடன் இணைந்துள்ளார் இளையராஜா. 1980களில் நாம் கேட்ட இசைஞானி இசையை மீண்டும் கொடுத்துள்ளார். எனவே கேட்பதற்கு மனதிற்கும் இதம்.
வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகே தனி அழகு. படத்தில் நீளமும் குறைவாக இருப்பதால் எடிட்டரை நிச்சயம் பாராட்டலாம்.
நாம் அன்றாடம் பார்க்கும் எளிமையான காதல் கதையை கிளைமாக்ஸ் இல் வலிமையான காதலாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் மனோஜ்.
என்னதான் நவீன காலம் தொழில்நுட்ப காலம் சில மனிதர்களிடையே சாதி வெறி இன்னமும் ஊறிப் போய் இருக்கிறது என்பதை சொல்லி இருக்கிறார்.
ஆணவ படுகொலை ஆதிக்கம் இருந்தாலும் அதை கொஞ்சம் மாற்றி சொல்லி இருக்கிறார் திரைக்கதை ஆசிரியர் சுசீந்திரன்.
அதே சமயத்தில் சமூகத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக கருத்தை சொல்லி மார்கழி திங்களை மணக்க செய்திருக்கிறார்கள்.
