Latest:
திரை விமர்சனம்

800 பட விமர்சனம்

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான `800′ திரைப்படம் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகியுள்ளது.

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பட நடிகர் மதுர் மிட்டல், முத்தையா முரளிதரனாக நடித்துள்ளார். முத்தையா முரளிதரன் வேடத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருந்து பின்னர் விலகினார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்களை நாசரும் ஹரிகிருஷ்ணனும் உரையாடி பேசிக் கொண்டிருப்பதாக கதை நகர்கிறது. இதில் நாசரின் மகனும் கிரிக்கெட் வீரனாக ஆசைப்பட்டு தன் ஒரு காலை இழந்ததும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகமே வியந்து பார்த்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை சம்பவங்கள் தான் இந்த படத்தின் தொகுப்பு .அவரது இளமை பருவம் முதல் தொடங்கி இன்றைய வாழ்க்கை வரை தொகுக்கப்பட்டுள்ளது.

இதில் விளையாட்டு சவால்கள்.. இல்லற வாழ்க்கை.. சந்தித்த பிரச்சனைகள்.. இலங்கை போர்க்களம்.. இலங்கை அகதி.. வெளிநாடு சுற்றுப்பயணம்.. பங்கேற்ற போட்டிகள்.. என அனைத்தையும் சுவாரசியமாக கொடுத்துள்ளனர்.

கிரிக்கெட் மீது தனக்குத் தோன்றிய ஆசையை செயல்படுத்த முடியாமல் தவிப்பது.. வாய்ப்புகள் அமைந்தாலும் போட்டியில் பங்கேற்க முடியாமல் ஏங்குவது என அனைத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகன் மதுரை மிட்டல்.

அவரது உடல் மொழியும் வேதனைக்கு பின்னர் சாதனைக்கு ஏற்ப மாறுகிறது.. ஒரு கட்டத்தில் துவண்டு போகும்போது சோர்ந்து கிடப்பதும்.. கிரிக்கெட்டில் சாதனைகளை செய்து கொண்டிருக்கும்போது கம்பீரத்துடன் திரிவதும் என உடல் மொழியை மாற்றி முரளிதரன் ஆகவே வாழ்ந்திருக்கிறார் நாயகன் மதுர் மிட்டல்.

ஒரு காட்சியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கும்போது ‘ஆயுதத்தை எதிர்க்க ஆயுதம் ஏந்துவது சரியா?’ எனக் கேட்பது ரசிக்க வைக்கிறது.

அதை சமயம்.. இங்கே மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போது விளையாடுவது எப்படி சரியாக இருக்கும் இடம் பிரபாகரன் கேட்கும் போது கைதட்டல்களை கேட்க முடிகிறது.

இவர்கள் சந்திப்பு முடிந்த பின்னர் முரளிதரன் வெளியே வந்த போது நீ பேசியது சரியா என் நண்பர்கள் கேட்கும்போது என்னால் சிங்களர்களுக்கோ தமிழர்களுக்கோ ஆதரவாக பேச முடியாது என சொல்லி முரளிதரன் பேசும் வசனம் அவர் மீதான மதிப்பை உயர்த்துகிறது.

இதில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் எந்த இடத்திலும் அது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளும் கருத்துக்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளியின் அப்பாவாக வேல ராமமூர்த்தி, அம்மாவாக ஜானகி சுரேஷ், பாட்டியாக வடிவுக்கரசி, குட்டி பையன் முரளியாக சிறுவன் ரித்விக், இளவயது முத்தையா முரளியாக பிரித்வி, கிரிக்கெட் கோச்சாக சரத் லோகிதஸ்வா, விடுதலைப்புலி பிரபாகரனாக நரேன், கிரிக்கெட் வீரர் மலிங்காவாக காஸ்ட்யூமர் சத்யா என அனைத்து கேரக்டர்களும் அப்படி ஒரு பொருத்தம்..

மேலும் ஷேன் வார்னே, கபில்தேவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் பாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

முத்தையா முரளிதரனின் முழங்கை வடிவம், பௌலிங் ஆக்‌ஷன் சர்ச்சை தடை, பின்னர் அந்தத் தடையிலிருந்து மீண்டு வந்தது உள்ளிட்ட சம்பவங்களை அழகாக படமாக்கி இருக்கின்றனர்.

1980 90களில் அமைந்த கிரிக்கெட் ஸ்டேடியம்.. பயன்படுத்திய கார்கள்.. மக்கள் பயன்படுத்திய உடைகள், கிரிக்கெட் யூனிபார்ம் என அனைத்தையும் நேர்த்தியாக கொடுத்துள்ளார் கலை இயக்குநர்.

ஒளிப்பதிவும் எந்தவித குறையும் இன்றி காலத்திற்கு ஏற்ப மாறுபட்டுள்ளது. பின்னணி இசை ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்கிறது.

ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை படமாக்கும் போது எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் ரசிகர்கள் விரும்பிய வண்ணம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஸ்ரீபதி.

ஆக மொத்தம் 800 படம் கிரிக்கெட் ரசிகர்களின் சிக்சர்