Latest:
திரை விமர்சனம்

த்ரிஷா நடித்த தி ரோடு பட விமர்சனம் 3.5/5

த்ரிஷா, மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், விவேக் பிரசன்னா, வேல.ராமமூர்த்தி, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தி ரோடு’.

நாயகி திரிஷா. இவரது கணவர் சந்தோஷ் பிரதாப். இவர்களுக்கு 5-6 வயதில் ஒரு மகன் கவின்.

தன் மகனின் பிறந்த நாளை கன்னியாகுமரியில் கொண்டாட திட்டமிடுகின்றனர். அதற்கு மகனின் ஆசைப்படி காரில் பயணித்து செல்ல திட்டமிடுகின்றனர்.

அப்போது த்ரிஷா கர்ப்பமாக இருப்பதால் அவரால் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கணவனையும் தன் குழந்தையும் அனுப்பி வைக்கிறார்.

அவர்கள் சென்ற தேசிய நெடுஞ்சாலையில் நேசநதி என்ற பகுதியருகே பெரு விபத்தில் இருவரும் மரணம் அடைகின்றனர். அவர்கள் இறந்த இடத்தை பார்வையிட த்ரிஷா வருகிறார். சூழ்நிலை காரணமாக அந்த பகுதியில் ஒரு வீட்டில் இரவில் தங்க நேரிடுகிறது.

அப்போது த்ரிஷாவின் கனவில் வரும் மகன் “இந்த இடத்தை விட்டு போகாதே அம்மா..” என்கிறான்.

நான்கு வழிச்சாலையில் சாலைகள் விசாலமாக இருக்கும் போது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விபத்துக்கள் தொடர்ந்து நடப்பது நோக்கம் என்ன எனத் தேடுதல் வேட்டையில் இறங்குகிறார் திரிஷா.

இவருக்கு உதவியாக திரிஷாவின் தோழி மியா ஜார்ஜும் காவல்துறை அதிகாரி எம் எஸ் பாஸ்கரும் ஈடுபடுகின்றனர்.

விபத்து ஏற்பட என்ன காரணம்? விபத்தை ஏற்படுத்தியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக த்ரிஷா.. அவரது அறிமுக காட்சியே அசத்தல். இவருக்கு ஜோடி சந்தோஷ பிரதாப். ஸ்மார்ட்டான ஹீரோ என்றாலும் 10 நிமிடத்தில் இருந்து விடுகிறார்.

மியா ஜார்ஜின் கணவராக விவேக் பிரசன்னா வருகிறார். அவருக்கு பெரிதாக வேலை இல்லை. இடைவேளைக்கு முன்பு அமைதியான த்ரிஷாவாகவும் இடைவேளைக்கு பின்னர் ஆவேசமான த்ரிஷாவாகவும் கெத்து காட்டி இருக்கிறார்.

வேலராமமூர்த்தி, செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளனர்.

சார்பட்டா பரம்பரை-யில் டான்சிங் ரோசாக வந்து கலக்கிய சபீர் இதில் மாறுபட்ட வேடத்தை கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல ஆசிரியர் தவறான புகாருக்கு உள்ளானால் தவறான முடிவுகளை எடுக்கக் கூடும் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.

மாணவிகளை ஆசிரியர் பாலியல் தொல்லை செய்வதாக பல செய்திகளை படித்திருக்கிறோம். ஆனால் இதில் ஒரு ஆசிரியர் மீது பாலியல் புகார் அளிக்கும் தவறான பெண்களை இந்த படம் கண்முன் நிறுத்தி இருப்பது வித்தியாசமான கற்பனை. இதுவும் உண்மை சம்பவத்தில் அடங்குமா என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

அருண் வசீகரன் இயக்கத்தில் கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய சிவராஜ் எடிட்டிங் செய்ய சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தை பார்த்த பின்பு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் பயணிப்பவர்களுக்கு கண்டிப்பாக பயம் வரும். உதவி கேட்பது போல வந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களில் எவர் நிஜமான உதவி கேட்கிறார்? எவர் திருடர்கள் என்பதை கணிக்கவே இயலாது.

ஆனால் நிச்சயமாக தேசிய நெடுஞ்சாலை நடக்கும் குற்ற செயல்களுக்கு சில நேரங்களில் காவல்துறையும் ஒத்துழைக்கிறது என்பதை சில காட்சிகளில் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன்.

மக்கள் விழித்துக் கொண்டால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

ஆக தி ரோடு… பயத்தில் பயணம்.!