Latest:
திரை விமர்சனம்

ஷாட் பூட் த்ரீ சினிமா விமர்சனம்..

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன்.. மலையாளத்தில் மோகன்லால் நடித்த பெருச்சாளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன்.

இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஷார்ட் பூத் த்ரீ. இதில் வெங்கட் பிரபு சினேகா யோகி பாபு உள்ளிட்டவர்களுடன் நான்கு குழந்தைகள் நடித்துள்ளனர் முக்கிய வேடத்தில் மேக்ஸ் என்ற நாய் நடித்துள்ளது.

நடிகர் நாசரின் பின்னனி குரலில் படம் பயணிக்கிறது.

நான்கு வெவ்வேறு குடும்பம்.. அந்த குடும்பங்களில் குழந்தைகள் உள்ளன. கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் சியாமளா (சினேகா) சுவாமிநாதன் (வெங்கட் பிரபு) தம்பதிகளுக்கு ஒரே மகன் சிறுவன் கைலாஷ்… மகன் தனக்கு ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்கிறான்.

பெற்றோர்கள் மறுக்கவே வீட்டில் செல்லமாக வளர்க்க ஒரு நாய்க்குட்டியாவது வேண்டும் என்கிறான்.

ஒரு கட்டத்தில் நாய் கிடைக்கவே வளர்க்க ஆரம்பிக்கிறான். ஆனால் சில தினங்களில் அந்த நாய் தொலைந்து போகவே தன் நண்பர்களுடன் இணைந்து அந்த நாயை தேடுகிறான்.. மற்றொரு பக்கம் நாய்களை கொன்று புதைக்க திட்டம் போடுகிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.

அந்த மேக்ஸ் என்ற நாய் கிடைத்ததா.?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கைலாஷ் ஹீத், சூப்பர் சிங்கர் ப்ரணிதி, வேதாந்த் மற்றும் ‘மாஸ்டர்’ புகழ் பூவையார் ஆகிய 4 குழந்தைகள் தங்கள் கேரக்டர்களுக்கு ஏற்றவாறு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் கிளைமாக்ஸ் காட்சிகளில் பூவையாருக்கு ஓவர் பில்டப் ஹீரோயிசம் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளையாவது குழந்தைகளாக காட்டுங்கள்.. மாஸ் ஹீரோ என்ற பெயரில் அவர்களையும் கெடுத்து ரசிகர்களை சோதிக்காதீர்கள்.

ஒரு ‘கோல்டன் ரெட்ரீவர்’ நாய் ‘மேக்ஸ்’ நடித்துள்ளது. நாயை பிடிக்காதவர்களுக்கு கூட இந்த நாயை கண்டால் அவ்வளவு பிடிக்கும். அதன் குறும்புத்தனமும் ரசிக்க வைக்கிறது.

செல்போன் விளையாட்டால் ஏற்படும் விபரீதம்… வீட்டில் தனி அறையில் குழந்தைகளை தங்க வைப்பது உள்ளிட்ட காட்சிகள் மூலம் விழிப்புணர்வை கொடுத்துள்ளார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.

குழந்தைகளை மையப்படுத்தி காட்சிகள் நகர்வதால் மற்ற நடிகர்களுக்கு பெரிதாக காட்சிகளும் கொடுக்கப்படவில்லை. சினேகா வெங்கட் பிரபு யோகி பாபு ஆகியோர் கதை ஓட்டத்துக்கு உதவியுள்ளனர்.

தெருநாய்களால் ரேபீஸ் நோய் தாக்கத்துக்கு ஆளாகுகின்றனர். அதேபோல் நாய்க்கடியால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.. அதையும் கொஞ்சம் பதிவு செய்திருக்கலாம் இயக்குநர்.

நாயை தேடும் காட்சிகளில் பெரும்பாலும் இரவு நேரம் அதிகம் என்பதால் அதற்கு ஏற்ப லைட்டிங் கொடுத்து காட்சிகளை படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர்.

வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் பின்னணி இசை சுமார் தான். பின்னணி இசை குழந்தைகளுக்காக கொடுக்கப்பட்டாலும் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

மழையில் ஒரு குட்டி நாயை காப்பாற்றும் போது பின்னணியில் ஒலிக்கும் கடவுள் ஹனுமார் பாடல் ஏன்.? ஒருவேளை குழந்தைகளை குஷிப்படுத்த அந்த பாடல் தேவையோ என்னவோ.?

குழந்தைகளுக்காக உழைக்கிறோம் குழந்தைகளுக்காக ஓடுகிறோம் குழந்தைகளுக்காக செலவு செய்கிறோம் என்று பணத்தின் பின்னால் ஓடும் பெற்றோர்கள் குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவது இல்லை என்பதை உணர்த்துகிறது இந்த ஷாட் பூட் த்ரீ.

ஆக ஷாட் பூட் த்ரீ படம்… குழந்தைகளுக்கான பாடம்..