Latest:
திரை விமர்சனம்

இறுகப்பற்று விமர்சனம்…

காதல் தம்பதிகளின் வாழ்வில் வீசும் பிரச்சனை புயல்களை அலசும் படம் இருகப்பற்று.

விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு ஜோடி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

அடுத்த ஜோடி விதார்த் – அபர்னதி இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை.

அடுத்த ஜோடி ஸ்ரீ – சானியா ஐயப்பன். இவர்கள் இளவயது தம்பதி.

இதில் பிரச்னைகளுடன் வரும் தம்பதிகளுக்கு Couples Therapy’ கொடுக்கிறார் மித்ரா (ஷ்ரத்தா). தன்னைத் தேடி வரும் தம்பதியர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தன் கணவருடன் எந்தவித சண்டையும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாகவே இருக்கிறார் ஷ்ரத்தா.

தன் மனைவியிடம் முன்போல் காதல் இல்லை என கரிந்து கொட்டுகிறார் நாயகன் ஸ்ரீ..

மற்றொரு ஜோடியான விதார்த் அபர்னதிக்கு என்ன பிரச்சனை என்றால் தன் மனைவி குண்டாக இருக்கிறார்.. உடைகளில் கவனம் இல்லை என்கிறார் விதார்த். இதனால் ஷ்ரத்தாவிடம் சென்று ஆலோசனை கேட்கிறார் அபர்னதி.

இவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்தாரா? ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஷ்ரத்தாவுக்கும் பிரச்சனை வருகிறது.. அது என்ன பிரச்சனை? அதனை தீர்க்க என்ன செய்தார் என்பதுதான் மீதிக்கதை.

இந்த மூன்று ஜோடிகளில் அதிகம் ஸ்கோர் செய்வது விதார்த் அபர்னதி ஜோடி தான். அவர்களின் வாழ்வு அன்றாட வாழ்வியலோடு யதார்த்த தம்பதிகளாக காட்டப்பட்டுள்ளது. அப்பாவியாக அபர்னதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

எப்போதுமே ஸ்லிம்மாக காணப்படும் அபர்னதி இந்த படத்திற்காக 20 கிலோ எடையை கூட்டி பிறகு ஸ்லிம் ஆகி இருப்பது பாராட்டுக்குரியது. கணவன் விவகாரத்தை கேட்கும் போது அவர் உடைந்து அழும்போது நம் கண்களும் கலங்கி நிற்கும்.

அதுபோல வீட்டுக்கு லோன் வாங்கி வேலை இல்லாத போது படும் கஷ்டங்களை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார் விதார்த். லோன் கட்டுவதற்காகவே 20 வருடங்களை கழிக்க வேண்டும்.. சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் வாழும் ஆண்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

விக்ரம் பிரபு ஷ்ரத்தா ஜோடிக்கு சண்டையே வராமல் இருந்தாலும் ஒரு கட்டத்தில் எப்படி எல்லாம் சண்டை வருகிறது சண்டை நிறுத்தப்படுகிறது என்பதை ஹைடெக் தம்பதிகளாக காட்டி இருக்கிறார் இயக்குனர். ஸ்ரத்தாவின் கதாபாத்திரம் சில நேரங்களில் ஓவர் அட்வைஸ் ஆக தெரிகிறது. ஆக்சன் படங்களில் அடித்து தூள் கிளப்பிய விக்ரம் பிரபு இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்.

இளம் வயது ஜோடிகளாக ஸ்ரீ – சானியா ஐயப்பன் நடித்துள்ளனர். தன்னுடைய வேலையில் தவறுகளை சுட்டிக் காட்டும் போது தான் தன் மனைவியிடம் தான் சண்டையிட்டதை உணர்கிறார் ஸ்ரீ. தன்னைவிட தன் மனைவி ஸ்மார்டாக புத்திசாலியாக இருப்பதை ஏற்றுக் கொள்ளாத கதாபாத்திரத்தில் ஸ்ரீ. என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் கணவனுக்கு கட்டுப்பட்டு வாழும் சாந்தமான பெண்ணாக சானியா.

ஸ்ரீ – மனோபாலாவுக்கும் உள்ள காட்சிகள் கொஞ்ச நேரமே என்றாலும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.. மனைவியை அறிவு கெட்ட முண்டம் எனத் திட்டும் ஆண்களுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு விழிப்புணர்வை கொடுக்கும்.

சந்தோஷம் என்பது விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பதில் மட்டுமல்ல.. என்ன சாப்பிட்டாய்? என்ன செய்கிறாய்? இரவில் காரில் பயணிப்பது.. கடற்கரைக்கு செல்வது.. சந்தோஷங்களை பகிர்வது.. வீட்டு வேலையில் கை கொடுப்பது.. என அனைத்திலும் உள்ளது என காட்சிகளை கோர்த்து தம்பதிகளுக்கு பாடம் எடுத்துள்ளார் இயக்குனர் யுவராஜ் தயாளன்.

எட்டு வருடங்களுக்கு முன்பு வெளியான தெனாலிராமன் & எலி ஆகிய படங்களை இயக்கியவர் தான் இந்த யுவராஜ். தற்போது முற்றிலும் வேறு ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இன்றைய தம்பதிகளுக்கு வாழ்வில் உள்ள இடைவெளியை குறைக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஜஸ்டின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. கார்த்திக் நேத்தா எழுதிய பாடல் வரிகள் பாடலுக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

பொதுவாகவே எல்லா படங்களிலும் வில்லன் கதாபாத்திரம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் தம்பதிகளுக்குள் புரிதல் இல்லை என்றால் அதுதான் வில்லன் என்பதை வித்தியாசமாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினாய் கவனிக்க மணிகண்டன் பாலாஜி படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

இரண்டாம் பாதி நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம் எடிட்டர். மற்றப்படி ஒளிப்பதிவாளர் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார். படத்தில் கிட்டத்தட்ட 10 கேரக்டர்கள் மட்டுமே வருகின்றன அனைத்தையும் சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர்.

ஆக இந்த இறுகப்பற்று உறவை இறுகப்பற்றிக் கொண்டால் மட்டுமே வாழ்வில் உயர முடியும் என்பதை உணர்த்தியுள்ளது.