Latest:
திரை விமர்சனம்

சந்திரமுகி 2 விமர்சனம்..

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் 18 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‘சந்திரமுகி’. அந்த படத்தின் தொடர்ச்சியாக ‘சந்திரமுகி 2’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் பி வாசு.

எம் எம் கீரவாணி இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் ராதிகா. இவரது அண்ணன் சுரேஷ் மேனன். ரவி மரியா & விக்னேஷ் ஆகியோர் இவர்களது தம்பிகள். இவர்கள் குடும்பத்தில் தொடர்ச்சியாக பிரச்சனைகள் நடக்கின்றன.

எனவே பிரச்சினைகளை தீர்க்க சாமியாரை பார்க்கின்றனர். அவரோ நீங்கள் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்தால் மட்டுமே இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்கிறார். எனவே தங்கள் குலதெய்வம் இருக்கும் கிராமத்திற்கு குடும்பத்துடன் செல்கின்றனர் ராதிகா குடும்பத்தார்.

ராதிகாவின் மகள் வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்ததால் அவர்களுடன் பேசாமல் இருக்கிறார். ஆனாலும் அவர்களும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என நிர்பந்தம் இருப்பதால் அவர்களை அழைக்கின்றனர். ராதிகாவின் பேரன் பேத்தியை அழைத்துக் கொண்டு ராகவா லாரன்ஸ் வருகிறார்.

ஒரு மண்டலம் காத்திருந்து விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும் என்பதால் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுக்கின்றனர்.

சந்திரமுகி 1 படத்தில் காட்டப்பட்ட பங்களா தான் அது. அந்த பங்களாவின் ஓனர் தான் வடிவேலு. பங்களா அருகே இருக்கும் மற்றொரு வீட்டில் மகிமா நம்பியார் தங்கி இருக்கிறார்.

அந்த பங்களாவில் தான் பல வருடங்களாக வேட்டையனை பழிவாங்க சந்திரமுகி காத்திருக்கிறாள். அதன் பிறகு என்ன நடந்தது? பூஜை முடிந்ததா? பிரச்சனைகள் தீர்ந்ததா? சந்திரமுகி வேட்டையனை பழி தீர்த்தாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

18 வருடங்களுக்கு முன்பு வெளியான சந்திரமுகி படத்தை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு இந்த படம் புதிது அல்ல.

ஏனென்றால் அந்த கதாபாத்திரங்களை கொஞ்சம் மாற்றம் செய்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் பி வாசு.

ரஜினி இடத்தில் லாரன்ஸ்.. நயன்தாரா இடத்தில் மகிமா.. ஜோதிகா இடத்தில் லட்சுமி மேனன்.. சந்திரமுகியாக கங்கனா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இடைவேளைக்குப் பிறகுதான் வருகிறார் கங்கனா. முதல் காட்சியே கண்களிலும் மனதிலும் தங்கி விடுகிறது. அப்படி ஒரு அழகு தேவதையாக வருகிறார். ரா ரா என்ற பாடல் கிளைமாக்ஸ் காட்சியில் வருகிறது. ஆனால் ஜோதிகாவின் நடனத்தை இவரால் எட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை.

பாண்டியன் மற்றும் வேட்டையன் என இரண்டு கேரக்டரில் அதகளம் செய்து இருக்கிறார் லாரன்ஸ். வேட்டையன் கேரக்டரில் தூய தமிழ் பேசி தூள் கிளப்பி இருக்கிறார்.

பாண்டியன் கேரக்டரில் அடிக்கடி ரஜினி சாயல் வந்து போகிறது. மேலும் ரஜினி வடிவேலு காமெடியை கொஞ்சம் ரீ கிரியேட் செய்தது போல் காட்சிகள் உள்ளன. ஆனால் ரஜினி ரஜினி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பகல் ராத்திரி என எந்நேரமும் முழு மேக்கப்புடன் வருகிறார் ராதிகா.. தூங்கும் போது கூடவா மேக்கப் தேவை.?

வடிவேலு காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

இவர்களுடன் மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சுபிக்ஷா, சிருஷ்டி டாங்கே, ரவி மரியா, விக்னேஷ், குழந்தை மானஸ்வி உள்ளிட்டோரும் உண்டு.

இதில் லட்சுமி மேனன் கொஞ்சம் ஸ்கோர் செய்கிறார். ஆனால் சந்திரமுகியாக அவர் மாறும் போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கை குறைத்து இருக்கலாம்.

சாமியார் மனோபாலா வேடத்தில் மனோ பாலாவை இதிலும் நடித்திருக்கிறார். இந்த படம் 18 வருடங்களுக்குப் பிறகு வருவதால் நித்தியானந்தா போல 5 அழகிகளுடன் வருகிறார் மனோபாலா. இதிலும் போலீ சாமியார் போலவே அஜக்.. பஜக்.. என உளறி செல்கிறார்.

பெயிண்டர் கோபாலுவாக ஆர் எஸ் சிவாஜி நடித்திருக்கிறார். ஒய் ஜி மகேந்திரன் சிறிய கேரக்டர் என்றாலும் ஆலோசனைகள் சொல்லி தன் கேரக்டரை நிறைவு செய்து இருக்கிறார்

தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பு…

சந்திரமுகி பங்களா மற்றும் பாழடைந்த குலதெய்வம் கோயிலும் அசத்தல். இப்படி ஒரு இடத்தை ஒருமுறை பார்க்க மாட்டோமா என ஏங்க வைக்கிறார் கலை இயக்குனர்.

படத்திற்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை பாராட்டு படி இருந்தாலும் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. முக்கியமாக… ரா ரா சரசுக்கு ரா ரா..என்ற பாடல் போல கிளைமாக்ஸ் காட்சியில் பாடல் வருகிறது.

ஆனால் சந்திரமுகி 1 இருந்த சுவாரசியம் பாடல்கள் இதில் சிறிதளவு கூட இல்லை.

இவையெல்லாம் மீறி குடும்பத்துடன் பார்க்கும் வகையில் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பி வாசு. அவரது படங்களில் எப்போதும் குடும்ப உறவுகள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

சந்திரமுகி 1 பாகம் வந்த போது 2K கிட்ஸ் பிறந்த குழந்தையாக இருந்திருப்பார்கள்.. அவர்கள் இந்த படத்தை உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள்.

எரிந்து கொண்டிருக்கும் பஸ்ஸில் பைக்கை ஓட்டிச் சென்று குழந்தைகளை காப்பாற்றும் லாரன்ஸ் நம்ப முடியாத கற்பனை.. அது போல கங்கனாவை தாக்க வரும் கருஞ்சிறுத்தையை ஒரே அடியில் வீழ்த்துவது ரொம்பவே ஓவர்.. அதுபோல 4 நாய்களை தட்டி தூக்கி எறியும் கங்கனாவும் நம்பும் படியாக இல்லை.

அரசர் காலம்.. போர்க்களம் என கதையை அமைத்து வித்தியாசம் காட்டி இருக்கிறார் இயக்குனர் பி வாசு. கிளைமாக்ஸ் காட்சி ட ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.

ஆக சந்திரமுகி 2.. குடும்பத்துடன் கொண்டாடலாம்