இறைவன் விமர்சனம்.; என்னடா இது இறைவனுக்கு வந்த சோதனை

ஜெயம் ரவியும் நரேனும் நண்பர்கள். இவர்கள் இருவரும் காவல்துறையில் பணிபுரிகின்றனர். நரேனின் மனைவி விஜயலட்சுமி. நரேனின் தங்கை நயன்தாரா ரவி மீது காதல் கொள்கிறார். ஆனால் காதலை ஏற்க மறுக்கிறார் ரவி.
இந்த சூழ்நிலையில் சென்னை சிட்டியில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொல்லப்படுகின்றனர். இது தொடர் கொலையாக தொடரவே காவல்துறையும் மக்களும் பரபரப்பாகின்றனர்.
ஒரு கட்டத்தில் சைக்கோ கில்லரை பிடித்து ஜெயிலில் அடைக்கிறார் ஜெயம் ரவி. அந்த சமயத்தில் நடந்த மோதலில் நரேன் கொல்லப்படுகிறார்.
நண்பனை இழந்த மன வருத்தத்தில் இருக்கும் ஜெயம் ரவி போலீஸ் வேலையை துறக்கிறார். இதன் பின்னர் சைக்கோ கில்லர் ஜெயில் இருந்து தப்பி விடுகிறார்.
எனவே அவர் ஜெயம் ரவிக்கு நெருக்கமான நபர்களை ஒன்றன்பின் ஒன்றாக கடத்தி கொலை செய்கிறார். அதன் பின்னர் ஜெயம் ரவி என்ன செய்தார்? கொலையாளியின் நோக்கம் என்ன? காவல்துறை என்ன செய்தது? போலீஸ் வேலையை விட்ட ஜெயம் ரவி கொலைகாரனை கண்டுபிடித்தாரா.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
இதற்கு முன் தனி ஒருவன் படத்தில் போலீஸ் கேரக்டரில் அசத்தியிருந்தார் ஜெயம் ரவி. அந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நமக்கு ஏமாற்றம்தான். எப்போதும் ஆக்ரோஷமாக காணப்படுகிறார். முறைக்கிறார்.. கண்களால் எரிக்கிறார்.. அதுக்கு தான் ஜெயம் ரவியின் வேலை
தனி ஒருவன் படத்தைப் போலவே இந்த படத்திலும் ரவியை துரத்தி துரத்தி காதலிக்கிறார் நயன்தாரா. ஆனால் அவர் கண்டு கொள்வதே இல்லை. சில காட்சிகள் தனி ஒருவனை நினைவுப்படுத்துகின்றன.
வழக்கமாக எதற்கும் உதவாத கேரக்டரில் நயன்தாரா. இவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் வேறு ஒரு நாயகியை ஒப்பந்தம் செய்திருக்கலாம்.
சார்லியின் கேரக்டர் மனதில் நிற்கிறது. தன் மகளை இழந்து அவர் எடுக்கும் முடிவு நம்மை கண்கலங்க வைக்கிறது.
ஆசிஷ் வித்யார்த்தி, அழகம்பெருமாள், விஜயலட்சுமி என அனைவரது கேரக்டர்களும் வேஸ்ட்.
ஸ்மைலி கில்லராக ராகுல் போஸ். இடைவேளை வந்து நம்மை மிரட்டுகிறார் அதன் பிறகு வினோத் கிஷன் வந்து நம்மை நோகடித்து விடுகிறார். ஓவர் ஆக்டிங்கில் சிக்ஸர் எடுக்கிறார். தாங்க முடியல.!!
என்னதான் கதை திரைக்கதை சரியாக அமையவில்லை என்றாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என தன் பணியை சிறப்பாக செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்த்.
படத்தின் நீளத்தையும் ரசிகர்களையும் மனதில் வைத்து எடிட்டர் இரண்டாம் பாதியில் 10 நிமிட காட்சிகளை வெட்டி இருக்கலாம்.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பாராட்டும்படி உள்ளது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை.
‘என்றென்றும் புன்னகை’ படத்தை கொடுத்த அஹ்மது தான் இந்த படத்தையே இயக்கியிருகிறார். என்ன மன நிலையில் இருந்தாரோ.? இப்படி ஒரு கொடூரமான படத்தை அவரால் எப்படி கொடுக்க முடிந்தது.
கொலை குற்றவாளி சைக்கோ கில்லர் என பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம் ராட்சசன் கொலைகாரன் ஆகிய படங்கள் கூட இதில் அடங்கும். ஆனால் அதில் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதில் வேண்டா வெறுப்பாக மக்கள் மனநிலையை பாதிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் அகமது.
பெண்களைக் கடத்தி நிர்வாணப்படுத்தி அவர்களை துண்டு துண்டாக வெட்டி கைகால் தலைகால் தலைதனி என கொடுரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
இறைவன் படத்தில் இப்படி ஒரு வன்முறையா? என்பதை நினைத்தால் என்னய்யா.. இறைவனுக்கு வந்த சோதனை என்று யோசிக்க தோன்றுகிறது.
