சித்தா விமர்சனம்

தன் அண்ணனை இழந்தவர் சித்தார்த். தன் வீட்டில் அண்ணி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
மற்றொரு பக்கம் தன்னுடன் பள்ளியில் படித்த நிமிஷா உடன் காதல் கொண்டு வருகிறார். தன் அண்ணன் மகள் தன் உயிர் என்றளவில் பாசமாக இருக்கிறார் சித்தார்த். எனவே இவரை சித்தா சித்தா என்று மகள் அழைப்பது வழக்கம்.
இந்த நிலையில் இவரது குடும்ப நண்பரின் மகளுக்கும் தன் மகளுக்கும் சின்ன சண்டை வருகிறது. ஒரு நாள் மிகவும் சோர்வான நிலையில் இருக்கும் குடும்ப நண்பரின் மகளை சமாதானம் செய்து பள்ளியில் இருந்து வீட்டில் விடுகிறார்.
சில மணி நேரங்களில் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார் பொன்னி. எனவே சித்தார்த் மீது பாலியல் புகார் விழுகிறது.
இந்த வழக்கு போக்சோ சட்டத்தில் வருவதால் பிரச்சனைக்கு உள்ளாகிறார் சித்தார்த்.
அதன் பிறகு என்ன நடந்தது? தான் நிரபராதி என் நிரூபித்தாரா? இவர் நிரபராதி என்றால் குற்றம் செய்தவர் யார்? சித்தார்த்தி இல்லாமல் அந்த குடும்பம் கதி என்ன ஆனது? காதலி என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சித்தார்த் காதலியாக நிமிஷா சஜயன் மற்றும் அண்ணியாக அஞ்சலி நாயர். இரண்டு பெண் குழந்தைகளாக சஹஷ்ரா ஸ்ரீ மற்றும் ஆபியா தஸ்னீம் நடித்துள்ளனர். இவர்கள் ஐந்து பேருக்கும் விருதுகள் கிடைத்தாலும் ஆச்சரியமல்ல. அப்படி ஒரு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.
சித்தார்த் அவரின் காதலி அண்ணி ஆகிய மூவரும் மட்டுமே அனுபவிக்க நடிகர்கள். இந்த குழந்தைகள் அவர்களை மீறி அருமையான நடிப்பை கொடுத்து நம் வீட்டுக் குழந்தைகளாகவே வாழ்ந்துள்ளனர்.
நான் ஒரு நாயகன் என்பதை எங்கும் காட்டாமல் நம் குடும்பத்து வாலிபன் என வாழ்ந்திருக்கிறார் சித்தார்த். அவரின் நண்பர்கள் வடிவேலு & சதீஷ்.. போலீஸ்.. பாலியல் குற்றவாளி என ஒவ்வொருவரும் மிகையில்லாத நடிப்பை கொடுத்துள்ளனர். நிச்சயம் இந்த படம் பலருக்கு விழிப்புணர்வை கொடுக்கும் என நம்பலாம்.
பாலில் குற்றங்களுக்கு எதிரான நாயகியின் வசனம் சாட்டையடி.. ஆண்கள் எவனும் உத்தமன் இல்லை.. தன் வீட்டு பெண்களை பொக்கிஷமாகவும் அடுத்த வீட்டுப் பெண்களை வேறு மாதிரியாகவும் பார்ப்பதாகவும் வசனங்கள் உள்ளன.
பழனி என்றாலே கோயில்தான் என நாம் நினைத்திருக்கும் வேளையில் பழனி உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை வித்தியாசமான கோணத்தில் படமாக்கி இருக்கிறார். எங்கும் சினிமாத்தனம் இல்லாத உணர்வை அது தருகிறது. பாராட்டுக்கள் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணி.
சுரேஷ் A.பிரசாத்தின் படத்தொகுப்பும் த்ரில்லர் படமாக மாற்ற உதவியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இந்த சித்தா படத்தை இயக்கியுள்ளார். அவரது படங்கள் எப்போதும் யதார்த்தம் கலந்து குடும்ப உறவுகளை சித்தரிக்கும் படமாகவே அமையும். இந்த படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
பெண் குழந்தைகள் வளர்ப்பு முறை எவ்வளவு முக்கியமானது என்பதை ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்தி இருக்கிறார் இயக்குனர். கதை மட்டுமல்ல கதைக்குத் தேவையான நடிகர்களையும் அவர் சரியாக தேர்ந்தெடுத்து அருமையாக வேலை வாங்கியுள்ளார்.
பொதுவாக முன்னணி நடிகர்கள் பட க்ளைமாக்ஸில் ஹீரோயிசத்தை காட்டுவதாக இருக்கும். ஆனால் இதில் எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸ் காட்சியை கொடுத்து நம்ம அறியாமல் நம்மை கைதட்ட வைத்து விடுகிறார் இயக்குனர்.
நாம் சாதாரணமாக நினைக்கும் செல்போன் எந்த மாதிரியான விளைவுகளை சமூகத்திலும் குடும்பத்திலும் ஏற்படுத்தும் என்பதை காட்சிகளோடு சொல்லியிருப்பது அருமை அருண்.
நம் குடும்பத்தில் நெருங்கி பழகும் எந்த ஒரு நபராக இருந்தாலும் அவரையும் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதையும் எச்சரிக்கையாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் அருண்.
ஆக இந்த சித்தா… சிறப்பானவன்
