ரங்கோலி பட விமர்சனம்

வடசென்னையை மையப்படுத்தி எத்தனையோ கேங்ஸ்டர் கதைகள் வந்து கொண்டிருக்க, முதல் முறையாக வடசென்னையை மையமாக வைத்து வந்திருக்கும் பள்ளி மாணவர்கள் குறித்த விழிப்புணர்வு கதையே இந்த ரங்கோலி. நன்றாகப் படித்தாலும் அடிக்கடி அடிதடி சண்டையில் சிக்குவதால் தன் மகன் ஹம்ரேஷை அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு மாற்றுகிறார், சலவைத் தொழிலாளியான அப்பா ஆடுகளம் முருகதாஸ்..புது சூழல், புது மனிதர்கள் இது எதுவும் ஹமரேஷிற்கு பிடிக்கவில்லை. என்றாலும், தனக்கு பிடித்த பிரார்த்தனா அந்த பள்ளியில் படிப்பதால், அந்த பள்ளியை ஏற்றுக் கொள்கிறான் ஹமரேஷ்.
கார்ப்பரேஷன் பள்ளியில் இருந்து வந்த ஹம்ரேஷை அப்பள்ளி மாணவர்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ள மறுத்து அவனை விரட்டுகிறார்கள். ஒருநாள், செய்யாத குற்றத்திற்காக ஹமரேஷ் மீது பழி வந்து விழுகிறது.அந்த பழியால் ஹம்ரேஷை பிரார்த்தனா வெறுக்கிறாள். இதனால் உடைந்து போகிறான் ஹம்ரேஷ்.
பள்ளியை மாற்றினால் மாணவர்கள் ஒழுங்காக படித்து விடுவார்கள் என்ற எண்ணம் சரிதானா.? என்பது மீதிக் கதை அறிமுக நாயகன் ஹம்ரேஷ், கார்ப்பரேஷன் பள்ளியிலிருந்து கான்வென்ட் பள்ளிக்கு மாறும் மாணவனுடைய மனநிலை உளவியல் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை மிக எதார்த்தமாகவும் அழகாகவும் வெளிப்படுத்தி தான் ஒரு அறிமுக நடிகர் என்பதே தெரியாத அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு உறுதுணையாக இவருடன் நடித்த சக மாணவர்களும், அவருடைய காதலி பிரார்த்தனாவும் சிறப்பாக நடித்து கதைக்கும் படத்திற்கும் வலு சேர்த்து இருக்கின்றனர்.
நாயகனின் அப்பாவாக வரும ஆடுகளம் முருதாஸ் இயல்பான நடிப்பில் மனதில் பதிகிறார். அவரது மனைவியாக வரும் சாய்ஸ்ரீ, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அக்காவாக நடித்த அக்ஷயா, இன்னும் பாந்தம்.
பிரார்த்தனா தனது கண்களிலேயே நடிப்பை தந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
நில அரசியல், கல்வி அரசியல், உரிமை என ஆங்காங்கே அரசியலும் பேசுகிறது படம். ரசனைப் பாடல்கள் மூலம் இசையமைப்பாளர் சக்ரவர்த்தி தன் இருப்பை பதிவு செய்கிறார்.
காட்சிகளின் பின் புலத்தை உருவாக்குவதிலும் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிக நடிகையரை தேர்வு செய்வதிலும் அவர்களிடம் வேலை வாங்கியதிலும் இயக்கிய வாலி மோகன்தாஸ் தேர்ந்து தெரிகிறார். பிள்ளைக்கு சூடு போடுவது, டிசி கொடுப்பதாக மிரட்டுவது போன்ற காட்சி மறுமுறை திரைக்கதையில் வரும்போது அவற்றை அமைத்து இருக்கும் விதத்திலும் அற்புத இயக்கச் சிறப்பு.
ஒரு ஏழைக் குடும்பம் தன் பிள்ளையைப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்படுகிறது என்பதையும், அந்த மாதிரியான குடும்பத்திலிருந்து வரும் பிள்ளை ஒரே நேரத்தில் இரண்டு விதமான பள்ளிகளில் படிக்கும் பொழுது அவர் சந்திக்கும் உளவியல் ரீதியான பிரச்சனைகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி அதை ரசிக்கும்படியும் கொடுத்திருக்கிறார் இயக்கிய வாலி மோகன் தாஸ்.
ரங்கோலி அழகுக் கோலம்
