Latest:
திரை விமர்சனம்

பரம்பொருள் பட விமர்சனம்

நாயகன் அமிதாஷின் தங்கை வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட, அவரை காப்பாற்ற பல லட்சங்கள் தேவை. பணம் புரட்ட நாயகன் தேர்ந்தெடுக்கும் தொழில், திருட்டு. சிலை கடத்தல்காரர் வீட்டில் இருக்கும் ஐம்பொன் சிலை ஒன்றை திருட முயற்சிக்கும் நாயகன் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் வீட்டிலும் திருட முயற்சித்து, மாட்டிக் கொள்கிறான்.
போலீஸ் வேலையை வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கும் என்ற எண்ணம் கொண்ட சரத்குமார், அதற்காக குடும்பத்தை பிரிகிறார். ஆனாலும் அவரை பிடித்த பணவெறி போகவில்லை. அமிதாஷ் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து, அவர் மூலமாக சிலையை கைப்பற்றி அதை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். தங்கையின் மருத்துவ செலவுக்காக சரத்குமாருடன் பயணிக்க அமிதாஷும் சம்மதிக்கிறார்.
இருவரும் இணைந்து 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை ஒன்றை கைப்பற்றி விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். அதே சமயம், சிலை கடத்தல் விவகாரத்தில் அமிதாஷை பலிகடாவாக்கி விட்டு பணத்துடன் எஸ்கேப் ஆகவும் சரத்குமார் திட்டம் போட, இறுதியில் அவரது எண்ணம் பலித்ததா?, இல்லையா? என்பதை திகுதிகு திருப்பங்களுடன் சொல்வது தான் ‘பரம்பொருள்’.
பணம் தான் பிரதானம் என்ற எண்ணத்தில் பயணிக்கும் காவல்துறை அதிகாரி மைத்ரேயனாக சரத்குமார். அவரது ஒவ்வொரு அசைவிலும் மோசமான போலீஸ் தெரிகிறார். போலீஸிடம் சட்டம் பேசும் இளைஞர்களை கஞ்சா வழக்கில் சிக்க வைத்துவிட்டு, சாதாரணமாக கடந்து போகும் காட்சியில் நடிப்பில் அவரக்கே உரிய தனித்துவம்.
நாயகனாக அமிதாஷ், அப்பாவி முகத்தோடு, ஆபத்தான சூழ்நிலைகளை அதிரடியாக சமாளிக்கும் இடங்களில் நடிப்பில் சொல்லியடிக்கிறார். தங்கையை காப்பாற்றுவதற்காக பணத்திற்காக போராடுபவர், சரத்குமாருடன் இணைந்து பயணிக்கும் போது உள்ளூர இருக்கும் பயத்தை காட்டாத அந்த நடிப்பு வேற லெவல்.
நாயகியாக வரும் காஷ்மீரா பர்தேசிக்கு அதிக வேலையில்லை என்றாலும், காபி ஷாப் அழைத்த அமிதாஷை கட் அண்ட் ரைட்டாக எதிர்கொள்ளும் இடத்தில் அம்மணி நடிப்பு பெண்மணியாக தன்னை உறுதி செய்கிறார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல், கொஞ்ச நேரமே வந்தாலும் அழுத்தமான பாத்திரத்தில் நிறைவு.
சிலை கடத்தல்காரர்களாக வரும் வின்சென்ட் அசோகன், பாலகிருஷ்ணன் இருவரும் ஸ்டைலிஷ் வில்லன்கள்.
அமிதாஷின் தங்கையாக நடித்திருக்கும் சுவாதிகா, சார்லஸ் வினோத், கஜராஜ், செந்தில் குமரன், அப்பா சிவா என அத்தனைபேரும் சோடையில்லாத பாத்திரத்தேர்வில் பளபளக்கிறார்கள்.
எஸ்.பாண்டிகுமாரின் ஒளிப்பதிவும். யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இந்த பரம்பொருளுக்கு பக்க பலம். கடத்தப்படும் சிலைகள் அனைத்தும் பல கோடிக்கு வாங்கப்படுகிறதா? போன்ற தகவல்களை தெளிவாக விளக்கியிருக்கும் இயக்குநர் சி.அரவிந்த்ராஜ், திரைக்கதையை எதிர்பார்ப்புடன் நகர்த்தி செல்வதிலேயே படத்தின் வெற்றியை உறுதி செய்கிறார் விடுகிறார்.
12 கோடிக்கு விலை பேசப்பட்ட சிலை உடைந்த நேரத்தில் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகனை சீட் நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது. கிளைமாக்ஸ் சஸ்பென்ஸ் நிமிர்ந்து நிற்க வைக்கிறது.

பரம்பொருள், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெரும் பொருள்.