Latest:
திரை விமர்சனம்

லக்கிமேன் பட விமர்சனம்

வாழ்க்கையில் நாம் காணும் மனிதர்களில் வெற்றி பெற்று சிகரம் தொட்டவர்களை விட அன்றாடம் தோல்விகளைச் சுவாசித்து துரதிர்ஷ்டசாலிகளாக தங்களை எண்ணிக் கொள்ளும் மனிதர்களே அதிகம். அப்படிப்பட்ட ஒரு தோல்வியின் நாயகனை கதைக்களமாக்கி அவன் வாழ்வியல் போராட்டங்களை வகை பிரித்த விதத்தில் சிறப்பு கவனம் பெறுகிறான், இந்த ‘லக்கிமேன்.’
கதை நாயகன் முருகனாக வரும் யோகிபாபு ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். மனைவி, பள்ளிக்கு செல்லும் மகன் என சின்னக்குடும்பம் அவருடையது. எதைத் தொட்டாலும் தோல்வி தான் முன்னிற்கிற நம் முருகனுக்கும் ஒரு நாள் அதிர்ஷ்ட தேவதை கண் திறக்கிறாள். அவன் பணம் கட்டி வரும் சிட் பண்ட் கம்பெனி நடத்தும் அதிர்ஷ்டக் குலுக்கலில் கார் ஒன்று பரிசாகக் கிடைக்க…அதன்பின் அவன் வாழ்க்கையே போராட்டமாகமாறிப்போகிறது. அது எப்படி என்பது ‘கலகல’ பாணியில் அமைக்கப் பெற்ற திரைக்கதை சொல்கிறது.
ஒருநாள் முருகன் வரும் காரை நேர்மையான போலீஸ் அதிகாரி வீரா சோதனைக்காக மறிக்க, அவருடன் விவாதத்தில் ஈடுபடுகிறான் முருகன். அடுத்த சில நாட்களில் கார் காணாமல் போக…
அதே மோதல் அதிகாரியிடம் கார் காணாமல் போன புகார் செய்தாக வேண்டிய கட்டாயம். அவரோ ‘நான் தான் உன் காரை ஆள் வைத்து கடத்தினேன்’ என்கிறார். தனது அதிர்ஷ்ட தேவதையான காரை போலீஸ் அதிகாரியின் ஈகோவைத் தாண்டி முருகனால் மீட்க முடிந்ததா? என்பது எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லாத காட்சிகள்.
ரியல் எஸ்டேட் புரோக்கர் முருகனாக யோகிபாபு தனது வழக்கமான நடிப்பால் படத்தை கலகலப்பாக வைத்துக் கொள்கிறார். போலீஸ் அதிகாரியுடனான மோதலில் அவரது நாயை திருடி வருவதில் தொடங்கி மகனிடம் கன்னத்்தில் வாங்குவது வரை தனது நடிப்புக்கொடியை சற்று உயரமாகவே பறக்க விட்டிருக்கிறார்.
யோகிபாபுவின் மனைவியாக நடுத்தர குடும்பத்தின் இல்லத்தரசியாக ரேச்சல் இயல்பான நடிப்பில் வசீகரிக்கிறார். மழலை மாறாத துடுக்குத்தன பேச்சின் மூலம் யோகிபாபுவின் மகனாக வரும் சாத்விக் மனசை அள்ளிக் கொள்கிறான். .இன்ஸ்பெக்டர் சிவகுமார் பாத்திரத்தில் வரும் வீரா, யோகிபாவுடன் மோதத் தொடங்கும் இடம் தொடங்கி முடிவு வரை அந்த பாத்திரத்தை நடிப்பால் கன கச்சிதமாக தூக்கி நிறுத்துகிறார்.
யோகிபாபுவின் நண்பராக வரும் அப்துல் லீ, நண்பனுக்காக என்று ஒவ்வொரு கட்டத்திலும் விட்டுக்கொடுக்கும் இடங்களில் சிறப்பு கவனம் பெறுகிறார். தன்னம்பிக்கை பேச்சாளராக வரும் கௌதம் சுந்தர்ராஜன் ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் பதிகிறார். தப்பு செய்யும் போலீஸ்காரர் செண்பகமூர்த்தியாக ஹலோ கந்தசாமி, சுதந்திரப் போராட்டத் தியாகியாக ராகுல் தாத்தா, சிட்பண்ட் கம்பெனியின் மேலாளராக பிரதீப் கே விஜயன், வீராவின் எதிர்கால மனைவி அபர்ணாவாக சுகாசினி குமரன், வீரா மீது பொறாமை கொண்ட போலீஸ் அதிகாரியாக ஜெயக்குமார் பொருத்தமான பாத்திரத் தேர்வில் உலா வருகிறார்கள்.
இந்த உலகத்தில் சாமானியனின் சக்தி என்ன? என்பதை கதைப்போக்கில் எடுத்துச் செல்லும் இடங்கள் அத்தனையிலும் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் முத்திரை பதிக்கிறார். “முதுகில் குத்தும் ப்ரூட்டஸை விட முகத்தில் குத்தும் முகமது அலிக்குத் தான் மரியாதை அதிகம்” போன்ற வசனங்கள் படததோடு ரசிகனை சுலபத்தில் இணைத்துக் கொள்கிறது.
சந்தீப் கே விஜய்யின் ஒளிப்பதிவும் ஷான் ரோல்டனின் இசையும் படத்தின் கூடுதல் பலம். அதிர்ஷ்டமில்லாத ஒருவன் தனக்கான வாழ்க்கையை நேசிக்கும் அளவுக்கு மாற்றப்படும் கதைக்களம் ரசிகர்களுக்கு நிச்சயம் இனிய அனுபவம்.
அந்த வகையில் படம் பார்க்கும் ரசிகர்கள் இந்த லக்கிமேனை கொண்டாடுவார்கள்.