Latest:
திரை விமர்சனம்

லாக் டவுண் டயரி திரை விமர்சனம்

கோடீசுவர பெண்ணின் காதல் ஒரு சாதாரண கால் டாக்சி டிரைவருக்கு கிட்ட, காதல் தெரிந்த காதலியின் தந்தை துப்பாக்கி தூக்கும் அளவுக்கு போய் விட… அதைத்தாண்டி காதல் ஜோடி தம்பதியாகிறார்கள். அழகான பெண் குழந்தைக்கு பெற்றோராகிறார்கள். 5 வருடம் வாழ்க்கை மகிழ்சச்சியாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் குழந்தை மயங்கி விழ…மருத்துவ அறிக்கை ‘பிரெய்ன் ட்யூமர்’ என்கிறது. உடனடியாக ஆபரேஷன் அவசியம். செலவு 15 லட்சம் என்று டாக்டர் சொல்ல, தம்பதிகளுக்கு மயக்கம் வராத குறை.

அப்போது அழையாத விருந்தாளியாக கொரோனா வந்து கால் டாக்சி மூலம் வரும் வருமானத்துக்கும் வேட்டு வைக்க…இப்போது பணத்துக்கு எங்கே போவது? தவிக்கிறார்கள் தம்பதிகள்.

இந்த நேரத்தில் கால் டாக்சியில் ஒருமுறை பயணம் செய்த கோடீசுவரப் பெண்ணின் நப்பு நாயகனுக்கு கிடைக்க, விஷயம் தெரிந்த அவர் உதவ முன் வருகிறார். கூடவே ஒரு விபரீத கண்டிஷனும் வைக்கிறார். கணவர் வயதானவர் என்பதால் நாயகன் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த கண்டிஷன். நாயகன் இதற்கு உடன்படாமல் போக…குழந்தைக்கோ ஆபரேஷனுக்கு குறித்த நாள் நெருங்க…

இந்த விபரீத விண்ணப்பம் நாயகனின் மனைவி காதை எட்ட, குழந்தைக்காக அவரும் அந்த விபரீத கோரிக்கைக்கு உடன்பட…

நாயகன் தவறு செய்தானா? குழந்தைக்கு ஆபரேஷன் நடந்ததா? என்பது சென்டிமென்ட் கிளைமாக்ஸ்.

நாயகனாக விஹான் ஜாலி, நாயகியாக ஷகானா.
நாயகனாக நடித்திருக்கும் விஹான் ஜாலி நடிப்பில் தான் ஒரு நாயகன் என்பதை நிரூபித்திருக்கிறார். கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் போதும், உயிருக்கு போராடும் தன் குழந்தையின் நிலையை நினைத்து கலங்கும்போதும் மற்றும் நேகா சக்சேனாவின் வினோதமான விருப்பத்திற்கு இணங்க மறுக்கும்போதும் சிறப்பான நடிப்பில் முதல் படத்திலேயே பல படி தாண்டியிருக்கிறார். சண்டைக்காட்சியிலும் நடனத்திலும் நம்பிக்கை நாயகனாக தமிழ் சினிமாவில் தன்னை வரவு வைத்துக் கொள்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஷகானா, தமிழுக்கு புது வரவாக இருந்தாலும் நல்வரவு. காதலை மனதில் வைத்துக் கொண்டு காதலனை வறுத்தெடுக்கும் அந்த பொய்க் கோபம் இவர் நடிப்பில் அத்தனை அழகு.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகையான நேஹா சக்சேனா, படத்தின் திருப்புமுனை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. அவருடைய விருப்பம் வரைமுறை தாண்டியது என்றாலும், அதை அவர் வெளிப்படுத்தும் விதம், விரசம் இல்லாத ரசம்.

நேஹா சக்சேனாவின் கணவராக முகேஷ் ரிஷி, நாயகனின் அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர், நாயகியின் பெற்றோர்களாக ஜாலி பாஸ்டியன் – பிரவீனா, மற்றும் முத்துக்காளை, மொட்ட ராஜேந்திரன், முன்னா சைமன், விஷ்ணுகுமார், ‘கல்லூரி’ வினோத், திரிஷ்யா பாத்திரச் சிறப்பில் பளபளக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.கே.எச்.தாசின் கேமரா பாடல் காட்சிகளை அழகாகவும், சண்டைக்காட்சிகளை அமர்க்களமாகவும் காட்டி ரசிக்க வைக்கிறது.

ஜேசி கிஃப்ட்டின் இசையில் பாடல்கள் இனிமை.
லாக்டவுண் என்று தலைப்பு வைத்தாலும், ஊரடங்கு பிரச்சனை பற்றி அதிகம் பேசாமல், ஒரு பெண்ணின் பிரச்சினையை புதிய கோணத்தில் அணுகிய விதத்தில் இயக்குநர் ஜாலி பாஸ்டியன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நல்வரவாகி இருக்கிறார்.