Latest:
திரை விமர்சனம்

வெப் திரை விமர்சனம்

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா, சுபபிரியா மலர் ஆகிய மூன்று பேரும் தோழிகள். இவர்களின் இணைந்த நட்பில் போதை பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். இதற்கிடையே தனது நிறுவனத்தில் பணியாற்றும் புதிதாக திருமணம் ஆன அனன்யா மணியை பார்ட்டிக்கு அழைத்து சென்று குடிக்க வைக்கிறார்கள். அப்புறமாய் கூத்து, கும்மாளம் எல்லாம் முடித்து போதையுடன் வெளியே வரும் நான்கு பேரையும் நட்டி நட்ராஜ் கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைக்கிறார். அவர்களை நட்டி ஏன் கடத்தினார்? என்பது ‘வெப்’பமான கதை.
வழக்கமாக பெண்களை கடத்தியதற்கு பின்னணியில் ஒரு பிளாஷ்பேக் இருக்கும், அந்த பிளாஷ்பேக்கில் நட்டி பாதிக்கப்பட்டவராக இருப்பார். அதனால் தான் கடத்தியிருப்பார் என்று தானே உங்களுக்கு தோன்றும். உங்கள் ஊகம் சரி தான் என்றாலும், இறுதியில் நம் யூகத்தை பொய்யாக்கும் விதத்தில் ஒரு திருப்புமுனையோடு கதையின் போக்கையே மாற்றும் அந்த கிளைமாக்ஸ், ‘அடடா’ ரகம்.

நாகரீகம் என்ற பெயரில் திசை மாறும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கதையை கையில் எடுத்த இயக்குனர் ஹாரூன், தான் சொல்ல வந்த விஷயத்தை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.
நல்ல நாயகனை விட வில்லத்தனம் நிறைந்த நாயகன் வேடங்கள் அதிக அளவில் ரசிக கவனம் பெறும். அதை உணர்ந்து தனது கேரக்டரில் திறமையை கொட்டுகிறார், நட்டி. அவருடைய கோபமும் அதன் பின்னாக இருக்கும் ஆழமான அர்த்தமும் நடிப்பில் ஆஹா சொல்ல வைக்கும் ரகம்.
நாயகிகள் ஷில்பா மஞ்சுநாத், சாஷ்வி பாலா சுபப்பிரியா மலர், அனன்யாமணி ஆகியோர் தற்கால யுவதிகளின் பிரதிநிதிகள். கதையின் மொத்த கனமும் இவர்கள் மீது தான் என்பதை உணர்ந்து நடிப்பில் அதை வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் அழுத்தம் நிறைந்த அழகு.
‘மொட்ட’ ராஜேந்திரன் சிரிக்க வைக்கிறார். முரளி நடிப்பில் தன்னை கவனிக்க வைக்கிறார்.
கிறிஸ்டோபர் ஜோசப்பின் கேமரா பெரும்பாலான காட்சிகளை வீட்டுக்குள் படம் பிடித்தாலும அதை கலை நேர்த்தியுடன் தந்த விதம் அருமை.
கார்த்திக் ராஜாவின் இசையில் அருண் பாரதி, ‘ஆர்ஜே’ விஜய், ஜெகன் கவிராஜ் எழுதியுள்ள பாடல்கள் சுகராகம்.
இதுதான் ஸ்டைல் இதுதான் மாடர்ன் என்று தவறாகப் புரிந்துகொண்டு தடம் மாறும் இளைய தலைமுறைக்கு அழுத்தமான செய்தியைச் சொல்லியிருக்கும் இயக்குநர் ஹாரூன், இறுதியில் யாரும் எதிர்பாரா விஷயத்தை காட்சிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.