பீட்சா-3 பட விமர்சனம்

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அனுபமா, அவருடைய மகள் அபி வசித்து வருகிறார்கள். இவர்கள் சொந்தமாக ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கிய அபிக்கு ஞாபக மறதி பிரச்சினை ஏற்படுகிறது. அதுவும் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை இ்ந்த மறதி வந்து போகும். இவரின் இந்த மறதி நிலையை பயன்படுத்திக்கொள்ளும் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். ஆனால் இது அவருக்கு தெரியவில்லை. ஆனால் இந்த விவரம் அந்த பெண்ணின் தாய்க்கு தெரிய வந்தவுடன் அம்மா, மகள் இருவரையும் கொலை செய்து விடுகின்றனர்.
தற்போது அந்த ஸ்வீட் கடை இருந்த இடத்தில் புதிய உணவகத்தை கதாநாயகன் அஸ்வின் திறக்கிறார். இவர் காவல் ஆய்வாளரின் தங்கை பவித்ராவை காதலிக்கிறார். பவித்ரா ஆவிகளிடம் பேசுவதற்கான ‘ஆப்’ ஒன்றை உருவாக்கி வருகிறார். அஸ்வின் நடத்தும் உணவகத்தின் சமையல் அறையில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதோடு, அஸ்வின் சந்திக்கும் சில மனிதர்கள் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள்.
இந்நிலையில் தன்னைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், மர்ம மரணங்கள் பற்றிய பின்னணியை காதலி மூலம் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார் அஸ்வின். அப்போது சில அதிர்ச்சிகரமான உண்மைகள் அவருக்கு தெரிய வர…அந்த உண்மைக்கும் அவருடைய உணவகத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? என்பது திக் திக் திகில் களைமாக்ஸ்.
நாயகன் அஸ்வின் முழு படத்தையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். தன்னைச் சுற்றி நடக்கும் மர்மங்களை நினைத்து குழப்பமடைவது, காதலியின் அண்ணன் கொடுக்கும் தொல்லை என அனைத்து காட்சிகளிலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்து காட்டுகிறார்.
நாயகி பவித்ரா மாரிமுத்து, அவரது அண்ணனாக நடித்திருக்கும் டைரக்டர் கௌரவ் நாராயணன் கொடுத்த கேரக்டரில் சிறப்பான வெளிப்பாடு.
அனுபமா குமார், அபி நக்ஷத்ரா, கவிதா பாரதி, காளி வெங்கட், வீரா உள்ளிட்ட படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் சின்னச் சின்ன கேரக்டர்களிலும் முத்திரை பதிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ்வும் இசைமைத்த அருண்ராஜூம் இந்த திகில் கதைக்குள் முடிந்தவரை பயமுறுத்த முயன்றிருக்கிறார்கள்.
மோகன் கோவிந்த் இயக்கியிருக்கிறார். சிறுமிக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமையை பின்னணியாக கொண்ட திகில் கதைக்கு திரைக்கதை அமைத்தலில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘பீட்சா’ முதல் பாகத்தை போல் இந்த மூன்றாம் பாகமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
