சினிமா செய்திகள்திரை விமர்சனம்

மாமன்னன் விமர்சனம்

சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பகத் பாசில். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. வடிவேலு. பகத் ஆதிக்க வர்க்கம், வடிவேலு பட்டியலினம். வடிவேலுவின் மகன் உதயநிதி.
உதயநிதிக்குச் சொந்தமான இடத்தில் அவரது காதலி கீர்த்தி சுரேஷ் இலவச கல்வி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். அதற்கு இடைஞ்சல் செய்யும் பகத்தின் அண்ணன் சுனில், ஒரு கட்டத்தில் அடியாட்களை அனுப்பி கல்வி மையத்தைச் சேதப்படுத்தி விடுகிறார். பதிலுக்கு உதயநிதி கல்வி மையத்தில ்படித்த மாணவர்களை அழைத்துக் கொண்டு போ் சுனிலின் பயிற்சி மையத்தை அடித்து நொறுக்குகிறார்.

இதனால் பிரச்சினை வெடிக்கிறது. இதற்காக பஞ்சாயத்துப் பேச அழைக்கப்படுகிறார், வடிவேலு. வந்த இடத்தில் வடிவேலுவுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படாததால் பொங்கி வெடிக்கும் உதயநிதி, ஒரு கட்டத்தில், பகத்தை தாக்கியும் விடுகிறார்.

இதனால் கட்சிக்குள் பிரளயம் வெடிக்கிறது. பகத் மாற்றுக் கட்சிக்கு தாவுகிறார். தேர்தல் வருகிறது ச.ச.ம.க. சார்பில் வடிவேலுவே வேட்பாளராக களமிறங்குகிறார். அவரை வீழ்த்த எதிர்த்தரப்பு வியூகங்கள் வகுக்கிறது. வியூகங்கள் வென்றதா என்பதே மாமன்னனின் மீதிக்கதை.

அமைதியான முகம், ஆக்ரோஷ உணர்வு என படத்தில் ரொம்பவே மாறுபாட்டிருக்கிறார், உதயநிதி. அதை அவர் வெளிப்படுத்திய விதமும் அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையையும் ரசிகர்களுக்கு சுலபத்தில் கடத்தி விடுகிறார். தன்னை அடக்கி ஆள நினைப்பவர்களுக்கு எதிராக உதயநிதி வெகுண்டெழும்போதெல்லாம் திரையரங்கில் கைதட்டல் அரங்கை தாண்டுகிறது.

உதயநிதியின் அப்பா மாமன்னனாக நடித்திருக்கும் வடிவேலு தனது அசத்தலான நடிப்பு மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்கிறார். அதிகாரம் இருந்தும் தன் ஆழ் மனதுக்குள் அடியோடிப் போயிருக்கும் பயத்தால் அவர் தடுமாறும் இடங்கள் எல்லாமே விருதுக்கானேவை. அதிலும் கிணற்றில் கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு நியாயம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற வேதனையில் மலையில் தனியாக நின்று குலுங்கி அழுகிற இடம் ஆசம். “மண்ணாக இருந்த என்னை என் மகன் மாமன்னனாக மாற்றி விட்டான்” என்று சொல்லும் இடத்தில், அடியாத்தி… வயதான அந்த முகத்தில் தான் எத்தனை நெகிழ்ச்சி.

வில்லனாக அந்த அரசியல்வாதி கேரக்டரில் ஜொலித்திருக்கிறார் பகத் பாசில். தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அவர் காட்டும் ஆக்ரோஷம் மிரட்டல். பந்தயத்தில் தோற்றுப்போன நாய்க்கு அவர் கொடுக்கம் வெற்றித்மான தண்டனையிலேயே அவரது கேரக்டர் மீது ஒருபயம் வந்து விடுவது உண்மை. (ப்ரோ…சிறந்த வில்லன் விருது வகை தொகை தெரியாமல் தேடி வரும் உங்களுக்கு.).

நாயகியாக வரும் கீர்த்தி சுரேஷூக்கு கதைக்குள் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்றாலும், உதயநிதியை தவறாக புரிந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்கும் இடத்தில் ‘டச்’ செய்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே பலம்.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா காட்சிகளை கண்களுக்குள் கொண்டு வந்து விடுகிறது. குறிப்பாக அந்த மலைப்பிரதேச காட்சிகள் அத்தனை அழகு.

பட்டியலின மக்களின் வலிகளுக்கான மருந்தாக காட்சிகளையும், வசனத்தையும் வடிவமைத்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், அதிகாரத்தை குடும்ப சொத்தாக நினைத்து தலைமுறை தலைமுறையாக சக மனிதனை அடக்கி ஆள நினைப்பவர்களுக்கு, அரசியல் சாட்டையை எடுத்து புத்தி சொல்லியிருக்கிறார். அந்த கிளைமாக்ஸ் தனி ரகம்.

வசனங்கள் இன்னொரு வகை சாட்டை.

‘ஒருத்தனால திருப்பி அடிக்க முடியாதுன்னு தெரிஞ்சு, அவன திரும்ப திரும்ப நீ அடிக்கறேன்னா அது அயோக்கியத்தனம். உன்னால ஒருத்தன திருப்பி அடிக்க முடிஞ்சும் நீ அவன்கிட்ட திரும்ப திரும்ப அடி வாங்குனா அது கோழைத்தனம்…

‘இங்க ஆதங்கப்படுறதுக்குக்கூட ஒரு தகுதி வேணும் போல..’

நான் இத்தனை வருஷமா எனக்கு கிடைச்சது எனக்கான உரிமைன்னு நினைக்காம, எனக்கு அவங்க போட்ட பிச்சைன்னு நினைச்சேன் பாரு’
‘இவர இங்க நிக்க வச்சு இருக்குறது என்னோட அடையாளம். உன்ன உட்கார சொல்றது என்னோட அரசியல்’ -இப்படி வசனங்களே பாதிக்கதையை பேசிவிடுகிறது.

மாமன்னனுக்கு சூட்டலாம், மகுடம்