யாத்திசை பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், கே.ஜே.கணேஷ் தயாரிப்பில், புதுமுக நடிகர், நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள சரித்திர படம் ‘யாத்திசை’.
யாத்திசை என்றால் தென் திசை என்று பொருள். தென் தமிழகத்தை ஆண்ட சேர, சோழர்களை வீழ்த்திய பாண்டிய மன்னன் ரணதீர பாண்டியனை மையப்படுத்திய கதை. இதை எயினர் இனக்குழுவின் மூத்த குடியாக வரும் சந்திரகுமார் சொல்வது போல படத்தை தொடங்குகிறார்கள்.
ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் சேர, சோழர்களை எல்லாம் வென்று தனிப் பெரும் அரசாக பாண்டியப் பேரரசை நிறுவி தன் பலத்தை உணர்த்துகிறான், ரணதீர பாண்டியன். எஞ்சி இருந்த சோழர்களும் இனி பாண்டியனை எதிர்க்க முடியாது என்கிற நிலையில் காட்டுக்குள் தலைமறைவாகி விட, மிகச் சிறிய பழங்குடியினரான எயினர் கூட்டத்துக்கு தலைமை தாங்கும் கொதி என்கிற இளைஞன் பாண்டிய பேரரசை வீழ்த்த சபதம் ஏற்கிறான். சொன்னபடி சபதத்தில் வென்று பாண்டியன் அரியணையையும் கைப்பற்றுகிறான்.
எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்திராத அதிர்ச்சியை சந்தித்தாலும் அடுத்த அடிகளை நிதானமாக வைக்கும் பாண்டியன், சேயோனை வென்றானா என்பது பரபர கிளைமாக்ஸ்.
கணப்பொழுதில் தன் ராஜ்யம் கைவிட்டுப் போக, அந்த நிலையிலும் பதட்டப்பட்டு விடாமல் ஒரு பெரும் வீரனாக அடுத்தடுத்த அடிகளை கவனமாக வைத்து ஆட்சியை மீட்க களம் இறங்கும் ரணதீரனாக சக்தி மித்ரன் ரசிக்க வைக்கிறார். முறைப்படி வாளேந்திப் போரிட்டுப் பழக்கமில்லாத சேயோனுடன் மோத தன் வாள், கேடயத்தை தூக்கி எறிவதோடு, தன் மார்புக் கவசத்தையும் கழற்றி வீசும் ரணதீரன் கேரக்டர் மாவீரனாக திரையில் உயர்ந்து தெரிகிறது.
கொதியாக வரும் சேயோன் இன்னொரு நடிப்பு நல்வரவு. சோழர்கள் கைவிட்ட நிலையில், தானே சபதம் எடுத்து ஒவ்வொரு முன்னெடுப்பையும் கச்சிதமாக திட்டமிட்டு ஒரு கட்டத்தில் பாண்டியன் கோட்டைக்குள்ளேயே புகுந்து அவன் அரியணையில் அமரும் கம்பீரம் வரை சேயோனை மாவீரனாக உணர முடிகிறது.
சாமியாடியாக வரும் குரு.சோமசுந்தரம் அந்த கேரக்டரின் அதிரச்சியை நடிப்பால் நமக்கு கடத்தி விடுகிறார். பெரும்பள்ளி இனக்குழுவின் தலைவியாக வரும் சுபத்ரா சமயோசிதமாக தங்கள் இனக் குழந்தை அரசனின் வித்தாக இருக்க வேண்டும் என்று விரும்பி தன் இனப் பெண்ணை ரணதீரனுக்கு மணமுடித்து வைக்கும் இடத்தில் அழகான அரசியல் எட்டிப் பார்க்கிறது.
சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்த தமிழ் வார்த்தைகளை கொண்டு எயினர் குடியினர் பேசும் வசனங்களை எழுதியிருப்பது புதிய முயற்சி. சில தமிழ் வார்த்தைகள் சத்தியமாக புரியவில்லை. படத்தின் பெரும்பாலான காட்சி போர்க்கள காட்சிகள் தான். ஆனால், நாம் வழக்கமான சரித்திர படங்களில் பார்த்திருக்கும் போர்க்கள காட்சிகள் போல் அல்லாமல், நம் மனதுக்கு நெருக்கமாக, நாமே அந்த போர்க்களத்தில் பயணிப்பது போன்ற உணர்வை தரும் விதத்தில் மிக தத்ரூபமாக படமாக்கி இருப்பது சிறப்பு.
எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் நல்வரவாகி இருக்கிறார், தரணி ராசேந்திரன். குறிப்பாக சரித்திரகால போர்ப் படங்களின் வழக்கமான பாணியை உடைத்தெறிந்து உண்மைக்கு நெருக்கமாக கதை சொன்ன விதத்திலும் ‘அடடே’ சொல்ல வைத்து விடுகிறார்.
