திருவின் குரல் பட விமர்சனம்

குரலற்ற மாற்றுத்திறனாளியான திரு, அக்கா, அக்கா மகள், அப்பா, பாட்டி என அந்த சின்னக் குடும்பத்தின் செல்லப்பிள்ளை. என்ஜினியரான திருவுக்கு விரைவில் அத்தை மகளுடன் திருமணம் என்பது அந்தகுடும்பத்தின் அடுதத கட்ட சந்தோஷமாக இருக்கும்நிலையில் தான் அந்த அதிர்ச்சி. கட்டிட வேலையை மேற்பார்வையிட சென்ற திருவின் அப்பா பாரதிராஜா சந்திக்கும் விபத்து, அந்த குடும்பத்தின் நிம்மதியை புரட்டிப் போடுகிறது. அரசு மருத்துவமனையில் அப்பா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட, அங்கே பணியாற்றும் வார்டு பாய், லிஃப்ட் ஆபரேட்டர், பிணவறை ஊழியர், செக்யூரிட்டி என நால்வர் கொண்ட கொலைகார கூட்டணியுடன் திருவுக்கு மோதல் ஏற்படுகிறது. கொலைகாரர்களான அந்த நால்வர் திருவைப் பழி தீர்க்க போடும் அபாய ஸ்கெட்ச்சை திரு எப்படி எதிர்கொள்கிறான் என்பது விறுவிறு திகுதிகு திரைக்கதை.
வாய் பேச முடியாத, செவித்திறன் சற்றே பாதிப்படைந்த சவாலான திரு வேடத்தில் அருள்நிதி. சென்டிமென்ட் எமோஷன், அடிதடி என எல்லா ஏரியாவிலும் நடிப்பில் செம ஸ்கொர் செய்கிறார். அப்பாவாக பாரதிராஜா, பாசமான முகத்தைக் காட்டும்போதும், அரசு மருத்துவமனையில் உடல் வலியால் துடிக்கும்போதும் ஒரு நடிகராக நம் மனதில் மேடை போட்டு அமர்ந்து விடுகிறார்.
நாயகி ஆத்மிகாவுக்கு வந்து போகிற வேடம். வில்லன்களாக அஸ்ரஃப், ஜீவா, மகேந்திரன், ஹரீஷ் என நால்வருமே பொருத்தமான தேர்வு.
மருத்துவமனைக் காட்சிகள் தொடங்கியதும் அறிமுகமாகும் வில்லன்களின் கொடூரச்செயல்கள் படபடப்பை ஏற்படுத்தினாலும், ஒரு கட்டத்துக்கு மேல் ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் உணர்வே வந்து போகிறது. இவ்வளவு குற்றங்களைச் செய்யும் இந்த நால்வர் குழு, அரசு மருத்துவமனை ஊழியர்கள் என்பது மட்டும் கதையில் புதுசு. அதே நேரம் இவர்கள் டாக்டரை மிரட்டி நோயாளிக்கு விஷ ஊசி போட வைப்பதெல்லாம் ரொம்ப ஓவர் சாரே.
சாம் சி.எஸ். இசையில் “அப்பா அப்பா” பாடல் பாச உணர்வை கடத்துகிறது. அரசு மருத்துவமனையைக் கண்முன் நிறுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளரும் கலை இயக்குநரும் பாராட்டுக்குரியவர்கள்.
ஒரு சென்டிமென்ட் கிரைம் திரில்லர் படத்தைக் கொடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஹரிஷ் பிரபு முயன்றிருக்கிறார். ஆனால் கதைக்களம் அதாவது கொலைக்களம் அரசு ஆஸ்பத்திரி என்பதால் , இனி அரசுஅஸ்பத்திரி என்றாலே அடிவயிற்றில் பயஅமிலம் சுரப்பது நிச்சயம்.
