திரை விமர்சனம்

சாகுந்தலம் பட விமர்சனம்

காலம் காலமாய் புராணக் கதைகளுக்கு சினிமாவில் தனியிடம் உண்டு. விஸ்வாமித்திர முனிவரால் மேனகைக்கு பிறகுக்கும் குழந்தை சகுந்தலா, கண்வ மகரிஷியின் மகளாக அவரது ஆசிரமத்தில் வளர்கிறாள். அப்போது வேட்டையாட காட்டுக்கு வரும் மன்னன் துஷ்யந்தன், சகுந்தலாவை பார்த்தமாத்திரத்தில் காதலாக, சகுந்தலாவையும் அதே காதல் வீழ்த்துகிறது. இந்த காதல், வந்த வேகத்தில் காந்தர்வ திருமணம் வரை போக, சகுந்தலா தாய்மை அடைகிறாள். முறைப்படி வந்து மனைவியாக அழைத்துச் செல்வதாக வாக்களித்த மன்னன் நாடு திரும்புகிறான்.
இதற்கிடையே கண்வ மகரிஷியை சந்திக்க வரும் மாமுனி விசுவாமித்திரரின் கோபத்துக்கு ஆளாகும் சகுந்தலாவை ‘உன் கணவன் உன்னை மறந்து போவான்’ என்று சபித்து விடுகிறார். இதனால் பயந்து போன சகுந்தலா துஷ்யந்த மன்னனை காண அரண்மனை செல்கிறாள். ஆனால் முனிவர் சாபம் வேலை செய்ததில் சகுந்தலா யாரென்றே தெரியாது என்று சொல்லி விடுகிறான் மன்னன். மன்னனின் மறதியை தாண்டி உண்மைக் காதல் வென்றதா என்பது படத்தின் இறுதிப் பகுதி.
சகுந்தலாவாக சமந்தா, உருகி உருகி காதலிக்கும் வேடத்தில் மனசை அள்ளிக் கொள்கிறார். துஷ்யந்தனை பார்த்த மாத்திரத்தில் காதல் உணர்வை அவர் நடிப்பில் கொட்டும் இடம் அத்தனை அழகு. மன்னனின் மறதியால் தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு எதிராக வெகுண்டெழும் இடத்தில் சமந்தா, சகுந்தலாவாகவே மாறிப்போகிறார்.
மன்னன் துஷ்யந்தனாக நடித்திருக்கும் தேவ் மோகன், தோற்றம் மாதிரியே நடிப்பிலும் கம்பீரம்.
சச்சின் கெடேகர், மோகன் பாபு, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, பிரகாஷ் ராஜ், கெளதமி, மது, கபீர் பேடி என நட்சத்திரக் கூட்டம் அதிகம். கிராபிக்ஸ் புலியும் மான் குட்டியும் கொஞ்சும் இடம் ‘அடடா அழகு’ ரகம்.
சேகர் வி.ஜோசப்பின் ஒளிப்பதிவில் ‘எது கிராபிக்ஸ் காட்சி’ என்பதை கண்டு பிடிப்பது கடினம்.
மணிசர்மாவின் இசையில் பாடல்கள் சோடை போனாலும் பின்னணி இசை மனதை குளிர்விக்கிறது.
குணசேகர் இயக்கி இருக்கிறார். தெரிந்த ஒரு புராணக்கதையை தற்போதைய தொழில்நுட்ப வசதியுடன் பிரமாண்டமாக காட்சிப்படுத்தி பிரமிக்க வைத்தாலும், மிதமான கதைப்போக்கு மட்டும் வேகத்தடை.