சொப்பன சுந்தரி பட விமர்சனம்

நடுத்தர குடும்பம். நோயாளி அப்பா, உருப்படாத அண்ணன். பேசமுடியாத அக்கா, அப்பாவி அம்மா என அந்த குடும்பத்தின் நான்கு பேருக்கமான நம்பிக்கை நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். வரதட்சணையாக கார் கேட்கும் மாப்பிள்ளையால் அக்கா திருமணம் நின்று போகிறது. இந்நிலையில் கூப்பன் மூலமாக கார் ஒன்று பம்பர் பரிசாக கிடைக்க, அந்த காரை வைத்து குடும்பத்தின் பொருளாதார பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் நினைக்க, ஆனால் நடப்பது வேறொன்று. ஐஸ்வர்யாவின் மொத்தக் குடும்பமும் அந்த கார் மூலம் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்ள…அதில் இருந்து எப்படி மீண்டு வர முடிகிறதா? என்பது கதை. இதற்கிடையே ஐஸ்வர்யாவை முறைகேடாக அடையத் துடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கழுகுப்பார்வையும் அதில் ஐஸ்வர்யா சிக்கினாரா? தப்பினாரா? என்பதும் கதைக்குள் கதை.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆட்டம் பாட்டம் என்று கலக்கியிருப்பதோடு, கதையின் நாயகியாகவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அக்காவாக நடித்திருக்கும் தேசிய விருது நடிகை லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் சிக்சர் அடிக்கிறார். இவர் ஆவேசத்தில் பரிசுக் காரை உடைப்பது ஆவேச நடிப்புக்கு சான்று.
அம்மாவாக தீபா சங்கர், வழக்கமான தனது வெள்ளந்தியான வசன உச்சரிப்பின் மூலம் சிரிக்க வைக்கிறார். கணவரின் கிட்னியை விற்று விட்டு, பெண்களிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் முழிக்க அதற்கு மகள்கள் கொடுக்கும் பதிலடிக்கு அவர் கொடுக்கும் ரியாக்ஷன் இருக்கிறதே, அப்பப்பா…வெடிச்சிரிப்பு தியேட்டரில். ஐஸ்வர்யாவை வேட்டையாடத் துடிக்கும் அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் சுனில் ரெட்டி வில்லக்கொடி நாட்டுகிறார். ஐஸ்வர்யாவின் உருப்படாத அண்ணனாக கருணாகரன் வேறு லெவல் நடிப்பில் கவர்கிறார். போலீசிடம் மாட்டிக்கொண்டு அடி வாங்கும் கேரக்டரில் ரெடின் கிங்ஸ்லி சிரிக்க வைக்கிறார்.
அஜ்மல் தஷீனின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை அம்சம்.
கார் ஒன்றை வைத்துக்கொண்டு முழுமையான காமெடி படத்தை கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் அதை நகைச்சுவை இழையால் செதுக்கியதில் கவனம் பெறுகிறார்.
