சினிமா செய்திகள்திரை விமர்சனம்

ரிப்பப்பரி பட விமர்சனம்

மாஸ்டர் மகேந்திரன் முகம் தெரியாத பெண் ஒருவரை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலி காணாமல் போக, தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். கடைசியில் காதலி இருக்கும் ஊரை கண்டு பிடிப்பவர் அதிர்ச்சி அடைகிறார்.

அதிர்ச்சிக்கு காரணம், அந்த ஊர் பெண்களை காதலிப்பவர்களுக்கு அந்த ஊரார் தருவது கட்டாய மரணம். இப்படி காதலிக்கும் ஆண்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் அந்த ஊருக்குள் தான் தனது காதலியும் இருப்பதை தெரிந்து கொள்கிறார். காதலிக்காக எதையும் சந்திக்க முடிவு செய்யும் மகேந்திரன் அந்த ஊருக்கு செல்ல, அவரது நிலை என்ன ஆனது? காதலுக்காக கொலைகளை செய்வது யார்?, எதற்காக? என்பதை காமெடியாக சொல்வதே ‘ரிப்பப்பரி.’
நாயகனாக மாஸ்டர் மகேந்திரன் அந்த கேரக்டரில் பொருந்திப் போகிறார். நண்பர்களுடன் சேர்ந்து சேட்டை செய்வது, கொடூரமான கொலைகளுக்கு பின்னணியில் நடக்கும் சம்பவங்களில் சிக்கிக் கொள்வது, இறுதியில் வம்படியாக வந்து ஆபத்தில் சிக்கிக் கொள்வது என படம் முழுவதும் காமெடி கலந்த நடிப்பில் அசரடிக்கிறார்.

நாயகிகளாக நடித்திருக்கும் ஆரதி பொடி மற்றும் காவ்யா அறிவுமணி தங்கள் கேரக்டர்களில் பொருந்திப் போகிறார்கள்.
முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் ஸ்ரீனி, பிளாஷ்பேக் காதல் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.

நாயகனின் நண்பர்களாக வரும் நோபல் ஜேம்ஸ்-மாரி இருவரது காமெடிக்கும் திரையரங்கம் அதிர்கிறது.
ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினத்தின் கேமராவும், திவாகரா தியாகராஜனின் இசையும் ரிப்பப்பரிக்கு பக்க பலம்.
எழுதி இயக்கியிருக்கும் நா.அருண் கார்த்திக், திகில் பின்னணியிலான காதலை திரைப்படுத்திய விதத்தில் கவனம் பதிகிறார். படத்தில் காட்டப்படும் பேயும், அதை வடிவமைத்த விதமும் நாடக காதலுக்கு தரும் விளக்கமும் பலே ரகம்.